ஆஸ்திரியாவில் உயர்நிலைப்பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தாக்குதல் நடத்தியவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Austria High School Shooting: ஆஸ்திரியா நாட்டின் கிராஸ் நகரில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். துப்பாக்கிசூடு நடத்திய நபரும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. BORG Dreierschützengasse என்ற உயர்நிலைப் பள்ளியில் தான் இந்த துப்பாகிச்சூடு சம்பவம் நடந்துள்ளது.

உயர்நிலைப் பள்ளியில் துப்பாகிச்சூடு

இந்த கொடூர சம்பவத்தில் 9 மாணவர்களும், 1 ஆசிரியரும் உயிரிழந்ததாக கிராஸ் காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அங்கு சென்று பள்ளி மாணவர்கள் மற்றும் ஊழியர்களை பத்திரமாக வெளியேற்றியதாகவும், காயம் அடைந்த 10க்கும் மேற்பட்ட மாணவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும் காவல்துறை கூறியுள்ளது.

துக்கத்தில் ஒன்றாக நிற்கிறோம்

"பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும் ஆஸ்திரியாவில் உள்ள கிராஸ் நகரம் முழுவதற்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், ஒரு பள்ளியில் நடந்த இந்த கொடூரமான சம்பவத்தைத் தொடர்ந்து தெளிவு பெற நாங்கள் துக்கத்தில் ஒன்றாக நிற்கிறோம்" என்று ஐரோப்பிய ஒன்றிய செய்தித் தொடர்பாளர் பவுலா பின்ஹோ கூறினார்.

துப்பாக்கிச்சூடு நடத்தியது யார்?

துப்பாக்கிச்சூடு நடத்தியது யார்? முன்னாள் மாணவரா? இல்லை அங்கு படிக்கும் மாணவரா? இல்லை வேறு நபரா? என்பது தெரியவில்லை. இது குறித்தும் துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 300,000 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் கிராஸ் நகரம், ஆஸ்திரியா நாட்டின் தலைநகரான வியன்னாவிலிருந்து தென்மேற்கே சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது ஆஸ்திரியாவின் இரண்டாவது பெரிய நகரமாகும்.

ஆஸ்திரியாவில் துப்பாக்கி வைத்திருக்க கட்டுப்பாடு

ஆஸ்திரியாவில் கடுமையான துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் உள்ளன. அந்த நாட்டில் அரசிடம் இருந்து உரிமம் பெற்ற நபர்கள் மட்டுமே துப்பாக்கி வைத்துக் கொள்ள முடியும். துப்பாக்கி உரிமம் பெற தனிநபர்கள் உடற்பயிற்சி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும், துப்பாக்கி பாதுகாப்பு படிப்புகள் மூலம் திறனை நிரூபிக்க வேண்டும் மற்றும் ஆயுதங்களுக்கான பாதுகாப்பான சேமிப்பைக் காட்ட வேண்டும்.

100 பேருக்கு 30 துப்பாக்கிகள்

அங்கு பம்ப் அல்லது இயந்திர துப்பாக்கிகள், அதிக திறன் கொண்ட துப்பாகிகள், விரைவு துப்பாக்கிகள் மற்றும் ஒலி அடக்கிகள் போன்ற ஆயுதங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. சிறார்களுக்கு துப்பாக்கி வைத்திருக்க அனுமதி இல்லை. ஐரோப்பியர் அல்லாத குடியிருப்பாளர்கள் ஆஸ்திரியாவிற்குள் துப்பாக்கிகளை கொண்டு வர சிறப்பு அனுமதி தேவை. இருப்பினும், ஐரோப்பாவில் அதிக ஆயுதம் ஏந்திய பொதுமக்கள் வாழும் நாடுகளில் ஆஸ்திரியாவும் ஒன்று. இங்கு 100 பேருக்கு 30 துப்பாக்கிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.