பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், சீனாவின் சினோ பார்மில்  இருந்து 1.2 மில்லியன் கொரோனா தடுப்பூசி மருந்துகளை வாங்க முடிவு செய்துள்ளதாக அந்நாடு அறிவித்துள்ளது. அரசு ஆதரவு மருந்து நிறுவனமான சினோபார்மின்  துணை நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கோவில்-19 தடுப்பூசிக்கு சீனா வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது. இது சினோபார்ம் நிறுவனத்தின் உகான் நகர பிரிவு தயாரித்துள்ள தடுப்பூசி ஆகும். இந்த தடுப்பூசி கொரோனாவை ஒழிப்பதில் 79.3 சதவீதம் செயல்திறன் மிக்கது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சினோபார்ம் நிறுவனம் அறிவித்துள்ளது. 

மேலும் இது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கப்பட்ட முதல் தடுப்பூசி ஆகும். சீனா, இந்தியாவுக்கு அடுத்து உலகின் மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாடான பாகிஸ்தானில் 47 இலட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்த தனது நெருங்கிய நாடான சீனாவிடமிருந்து தடுப்பூசி கொள்முதல் செய்ய  பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. சீன நிறுவனமான சினோபார்மிடமிருந்து  1.2 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை வாங்க அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதை 2021 முதல் காலாண்டில் முன்கள பணியாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றும் பாகிஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் சவுத்ரி ஃபவாத் உசேன் தெரிவித்துள்ளார். 

கோவிட் தடுப்பூசிகளை வாங்க பாகிஸ்தான் இந்த மாத தொடக்கத்தில் 150 பில்லியன் டாலர் நிதி உதவி பெற்ற நிலையில், தடுப்பூசி வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எந்த தடுப்பூசிகளை வாங்குவது என்று பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில், நிபுணர்களின் குழு பரிந்துரைப் பட்டியலை தொகுத்து வருவதாகவும் அதில் ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இடம்பெற வாய்ப்புள்ளது எனவும் உசேன் கூறியுள்ளார். அதேபோல் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட வேறு எந்த தடுப்பூசியும் தனியார்துறை இறக்குமதி செய்ய விரும்பினால் அதை செய்யலாம் என்றும் உசேன் கூறியுள்ளார். சீன அரசாங்கத்தால் நடத்தப்படும் தேசிய சுகாதார நிறுவனம் தலைமையிலான CanSino Biologics இன் COVID-19 தடுப்பூசியான  Ad5-nCoV-ன்  மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகள் பாகிஸ்தானில் நடைபெற்று வருவது குறிப்பிடதக்கது.