இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியான விஜய் மல்லையா, இந்திய வங்கிகளிடம் பெற்ற முழுக் கடனில் செலுத்த வேண்டிய தொகையை திரும்ப செலுத்தத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

கிங்ஃபிஷர் நிறுவனரான விஜய் மல்லையா இந்திய வங்கிகளிடம் ரூ.9,000 கோடிக்கு மேல் கடன் பெற்றுத் திருப்பிச் செலுத்தாமல் நாட்டை விட்டே ஓடியவர். அவர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றர். லண்டனில் தஞ்சமடைந்துள்ள அவரை இந்தியாவுக்கு நாடுகடத்திக் கொண்டுவரும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 

இது தொடர்பாக லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இந்திய அரசு தொடர்ந்த வழக்கில் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக மல்லையா லண்டன் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால் அவரது இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் விஜய் மல்லையாவை நாடு கடத்துவதற்கு எதிராக அவரது தரப்பிலிருந்து மீண்டும் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது. இதில் 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு மல்லையாவை லண்டனிலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தும் உத்தரவிற்கு அவர் மீண்டும் மேல்முறையீடு வழக்கு தொடர அனுமதியளித்து உத்தரவிட்டது.  

இந்தத் தீர்ப்பு வெளியான பின் ட்வீட் போட்டுள்ள விஜய் மல்லையா “கடவுள் இருக்கிறார். நீதி நிலைநாட்டப்பட்டது. எனக்கு எதிரான குற்றங்கள் பொய்யானவை. நான் மீண்டும் கேட்கிறேன்; கிங்ஃபிஷர் நிறுவனத்துக்காக வங்கிகளிடம் நான் வாங்கிய கடனில் திருப்பி செலுத்த வேண்டிய  தொகையை திருப்பிக் கொடுக்கத் தயாராக உள்ளேன் எனவும், வங்கிகள் அதைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும்,  கிங்ஃபிஷர் பணியாளர்களின் சம்பளப் பாக்கியையும் நான் முழுவதுமாக வழங்கி விடுகிறேன் என தெரிவித்துள்ளார்.

இதேபோல இதற்கு முன்னதாக கடந்த மார்ச் 26ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில், தன்னிடமிருந்து பணத்தை வாங்கிக் கொண்டு ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தைக் காப்பாற்றும்படி இந்திய வங்கிகளைக் கேட்டுக்கொண்டார். இதன் மூலம் வேலைவாய்ப்புகளும், நகர இணைப்பும், நிறுவனமும் பாதுகாக்கப்படும் என்று கூறியிருந்தார்.