கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.. படுத்துக் கொண்டே போராடும் வருவாய்த்துறை அலுவலர்கள்.. ஏன்? - முழு விவரம்!
Karur Collectorate : கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் படுத்துக் கொண்டே போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர் வருவாய்த்துறை அலுவலர்கள். இந்த போராட்டத்தால் வருவாய் துறை சார்ந்த பணிகள் அனைத்தும் முடங்கின.
பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையிணை வெளியிட வேண்டும், இளநிலை வருவாய் ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையின் அடிப்படையில் விதித்திருந்த ஆணையினை வெளியிட வேண்டும், அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுமார் 80க்கும் மேற்பட்ட அலுவலர்கள் தங்களது பணிகளை புறக்கணித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து வருவாய்த்துறை அலுவலர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் படுத்துக் கொண்டே போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக வருவாய் துறை சம்பந்தமான பொது மக்களின் சான்றிதழ் மற்றும் தேர்தல் சம்பந்தமான பணிகளும் கடந்த ஒரு வாரமாக முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் ஏராளமான கோப்புகளும் தேங்கியதால் அனைத்து பணிகளும் முடங்கியுள்ளன.