சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தன்னுடைய கானா பாடலால் கலக்கி வரும் குட்டி பூவையாருக்கு, இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதியுடன் பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகள் அனைத்திற்கும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், கலந்து கொண்டு பாடி வரும் அனைவருக்குமே பல திரைப்படங்களில் பாடுவதற்கு வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. கடந்த சீசனில் வெற்றிபெற்ற செந்தில் கணேஷ் - ராஜலக்ஷ்மி தம்பதிகள், தற்போது தொடர்ந்து பல படங்களில் பின்னணி பாடல்களைப் பாடி வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து துவங்கப்பட்ட ஜூனியர் சீசனுக்கான நிகழ்ச்சியில் கானா பாடல்களை அடிப்படையாகக் கொண்டு, கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் குட்டி பூவையார். இவரின் கானா பாடலுக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.

ஏற்கனவே தளபதி விஜய் நடித்து வரும் படத்தில் இவர் நடித்துள்ளார்.  மேலும் ஒரு பாடலையும் பாடியுள்ளார். இதைத் தொடர்ந்து தற்போது இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி இசையில் பாடல் பாட இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

அண்மையில் ஹிப் ஹாப் ஆதி சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.  அப்போது பூவையாருடன் இணைந்து பாடினார்.  பின் அடுத்ததாக தன்னுடைய இண்டிபெண்டண்ட் ஆல்பத்தில் பூவையருக்கு பாட வாய்ப்பு கொடுக்க உள்ளதாக கூறினார். இந்த சம்பவம் அங்கு கூடி இருந்த அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்தது.