யமஹாவின் மைலேஜ் சேலன்ஜ்.. லிட்டருக்கு 90.3 கி.மீ. - மாஸ் காட்டிய ஹைப்ரிட் ஸ்கூட்டர்..!
சென்னையில் நடைபெற்ற மைலேஜ் சேலன்ஜ் நிகழ்வில் யமஹா நிறுவனத்தின் 125சிசி ஹைப்ரிட் ஸ்கூட்டர் மாடல்கள் மட்டுமே பங்கேற்றன.
யமஹா இந்தியா மோட்டார் நிறுவனம் சென்னையில் மைலேஜ் சேலன்ஜ் நிகழ்வு ஒன்றை நடத்தியது. அதில் சென்னையில் வசித்து வரும் யமஹா வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் சென்னையில் உள்ள யமஹா விற்பனை மையத்தில் ஒன்று கூடினர். சென்னை மட்டுமின்றி இதுபோன்ற நிகழ்வுகள் நாடு முழுக்க பெரும்பாலான யமஹா விற்பனை மையங்களிலும் நடத்தப்பட்டது.
மைலேஜ் சேலன்ஜ்:
அங்கு வாடிக்கையாளர்களின் வாகனத்தில் எரிபொருள் நிரப்பப்பட்டது. பின் அவர்களிடம் குறிப்பிட்ட பகுதியில் வாகனத்தை ஓட்ட யமஹா அதிகாரிகள் விலியுறுத்தினர். மொத்தம் 30 கிலோமீட்டர்கள் கொண்ட தேர்வு செய்யப்பட்ட பாதைகளில் வாகனத்தை ஓட்டிய வாடிக்கையாளர்களில் அதிக மைலேஜ் பதிவு செய்தவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்வில் பங்கேற்றவர்களில் இருந்து மூன்று வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இது போன்ற நிகழ்வின் மூலம் யமஹா வாகனங்களின் மைலேஜ் எப்படி இருக்கிறது என்பதை நிறுவனம் அறிந்து கொள்வதோடு, வாடிக்கையாளர்களும் எப்படி அதிக மைலேஜ் பெறுவது என்பதை அறிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்தது. நிகழ்வில் பங்கு பெற்ற வாடிக்கையாளர்களின் வாகனங்களில் எரிபொருள் நிரப்புவது, மைலேஜ் கணக்கிடுவது, இலவச 10 பாயிண்ட் செக்கப், இலவச வாட்டர் வாஷ் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
விழிப்புணர்வு:
சென்னையில் நடைபெற்ற மைலேஜ் சேலன்ஜ் நிகழ்வில் யமஹா நிறுவனத்தின் 125சிசி ஹைப்ரிட் ஸ்கூட்டர் மாடல்கள் மட்டுமே பங்கேற்றன. யமஹா நிறுவன ஹைப்ரிட் ஸ்கூட்டர் மாடல்கள் அதிக மைலேஜ் வழங்கும் என்பதால், இந்த நிகழ்வுக்கு இவற்றை மட்டும் பயன்படுத்த யமஹா நிறுவனம் முடிவு செய்தது.
இந்தியாவில் தினமும் பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே வருவதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் ஹைப்ரிட் ஸ்கூட்டர் மாடல்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் தான் இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது என யமஹா நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
வெற்றியாளர்கள்:
யமஹா மைலேஜ் சேலன்ஜ் நிகழ்வில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த வாடிக்கையாளர் தனது ஹைப்ரிட் ஸ்கூட்டர் மாடலை ஓட்டும் போது லிட்டருக்கு 90.3 கிலோமீட்டர் மைலேஜ் பெற்று இருக்கிறார். இரண்டாவது இடத்தை பிடித்த வாடிக்கையாளர் லிட்டருக்கு 87 கிலோமீட்டர் மைலேஜ் பெற்றார். மூன்றாவது இடத்தை பிடித்தவர் வாடிக்கையாளர் லிட்டருக்கு 84.8 கிலோமீட்டர் மைலே் பெற்றார்.
ஹைப்ரிட் ஸ்கூட்டர் மாடல்கள் என்பதால், பெட்ரோல் பயன்பாடு மட்டுமின்றி ஸ்கூட்டர்களில் பொருத்தப்பட்டு இருக்கும் பேட்டரி மூலம் கடக்கப்பட்ட தூரமும் கணக்கிடப்பட்டது. யமஹா மைலேஜ் சேலன்ஜ் நகழ்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முறையே ரூ. 2 ஆயிரம், ரூ. 1500 மற்றும் ரூ. 1000 மதிப்பிலான பரிசு கூப்பன் வழங்கப்பட்டது.