எலான் மஸ்க்கின் எக்ஸ் தளம் இரண்டாவது நாளாக செயலிழப்பை சந்தித்துள்ளது. பயனர்கள் பதிவிட முடியாமலும், உள்நுழைய முடியாமலும் சிரமப்படுகின்றனர். வெள்ளிக்கிழமை ஏற்பட்ட செயலிழப்பைத் தொடர்ந்து, சனிக்கிழமையும் தொழில்நுட்பக் கோளாறுகள் தொடர்கின்றன.

எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பல்வேறு செயல்பாடுகள் முடங்கியிருப்பதாக பல பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 'டவுன் டிடெக்டர்' (Downdetector) தளத்தின்படி, சனிக்கிழமை மாலை 6 மணியளவில் செயலிழப்பு குறித்த புகார்கள் பதிவாகி வருகின்றன.

நேற்றும் (வெள்ளிக்கிழமை) எக்ஸ் தளம் உலகளாவிய செயலிழப்பை சந்தித்த நிலையில் மீண்டும் இன்றும் இந்த இடையூறு ஏற்பட்டிருக்கிறது. இரண்டாவது நாளாக தொழில்நுட்ப சிக்கல்கள் வந்திருப்பது பயனர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் திடீர் முடக்கம் குறித்து எக்ஸ் பயனர்கள் மற்ற சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் தங்கள் அதிருப்தியையும், எதிர்கொண்ட பிரச்சனைகளையும் பதிவிட்டு வருகின்றனர். சிலர் தங்களுக்கு ஏற்பட்ட சிரமங்களைப் பற்றிய வேடிக்கையான மீம்களையும் (memes) உருவாக்கி தங்கள் அதிருப்தியை வெளியிடுகிறார்கள்.

இது, சமூக வலைத்தளங்கள் அன்றாட வாழ்வில் எந்த அளவு இன்றியமையாததாக மாறிவிட்டன என்பதை மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டுகிறது.

எக்ஸ் பயனர்கள் புகார்:

புதிதாக பதிவிட முயற்சிக்கும்போது “Something went wrong. Try reloading" (ஏதோ தவறு நேர்ந்துவிட்டது. மீண்டும் முயற்சிக்கவும்) என்ற செய்தி தோன்றுவதாக பயனர்கள் கூறியுள்ளனர்.

'டவுன் டிடெக்டர்' தகவலின்படி, வெள்ளிக்கிழமை, பாதிக்கும் மேற்பட்ட பயனர்கள் தங்கள் கணக்குகளில் உள்நுழைய (Login) முடியவில்லை என்று கூறியுள்ளனர். சுமார் 30 சதவீதம் பேர் மொபைல் ஆப் செயலிழப்பை எதிர்கொண்டனர். டைம்லைன் லோடு ஆகவில்லை, பதிய ட்வீட்களைப் பதிவிட முடியவில்லை எனக் கூறினர். 13 சதவீதத்தினருக்கு, வலைத்தளம் திறக்கவே இல்லை.

சைபர் தாக்குதல்:

இந்த ஆண்டு மார்ச் மாதம், எலோன் மஸ்க் தனது எக்ஸ் சமூக ஊடக தளம் பெரிய சைபர் தாக்குதலுக்கு இலக்கானதாகக் கூறினார். "நாங்கள் ஒவ்வொரு நாளும் தாக்கப்படுகிறோம். ஒரு பெரிய, ஒருங்கிணைந்த குழு அல்லது ஒரு நாடு இதில் ஈடுபட்டுள்ளது" என்று எலான் மஸ்க் ஒரு பதிவில் கூறினார்.

2022ஆம் ஆண்டில் ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க் அதற்கு எக்ஸ் என்று புதிய பெயர் வைத்து பல மாற்றங்களையும் கொண்டுவந்திருக்கிறார்.