ola s1 pro: ஏன் தீப்பிடிச்சுது, என்ன ஆச்சு? ஓலா விளக்கம் கொடுக்க அரசு உத்தரவு..!
ola s1 pro: வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து ஓலா S1 ப்ரோ ஸ்கூட்டர் ஏன் தீப்பிடித்து எரிந்தது என விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டு இருந்தது.
பூனேவில் ஓலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஏன் தீப்பிடித்து எரிந்தது என ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் அரசுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்து இருக்கிறார்.
தீப்பிடித்து எரிந்த ஸ்கூட்டர்:
சில நாட்களுக்கு முன் மும்பையில் சாலையின் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஓலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் திடீரென புகை கிளம்பியது. பின் தீப்பிடித்து ஸ்கூட்டர் முழுக்க கொளுந்து விட்டு எரிய தொடங்கியது. இந்த சம்பவங்கள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
இந்த வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து ஓலா S1 ப்ரோ ஸ்கூட்டர் ஏன் தீப்பிடித்து எரிந்தது என விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டு இருந்தது. "தேவைப்படும் பட்சத்தில் சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தை அரசு அழைக்கலாம்," என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகத்தின் செயலாளர் கிரிதர் அரமன்னே தெரிவித்து இருந்தார்.
தீப்பிடித்து எரிந்ததற்கான காரணம்:
ஓலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் தரமற்ற லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்பட்டு இருந்ததே, ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்ததற்கான முக்கிய காரணம் என பலரும் கூறி வருகின்றனர். லித்தியம் அயன் பேட்டரியினுள் சேதம் ஏற்பட்டாலோ அல்லது ஷார்ட் சர்கியூட் ஏற்பட்டாலோ தெர்மல் ரன்-அவே ஏற்படும். தெர்மல் ரன்-அவே தீ விபத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்டது ஆகும். மேலும் இதனை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான காரியம் ஆகும்.
விசாரணை:
"பூனேவில் ஓலா S1 ப்ரோ ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்த சம்பவம் குறித்த தகவல் எங்களுக்கு வந்தடைந்து உள்ளது. ஸ்கூட்டர் ஏன் தீப்பிடித்து எரிந்தது என்ற காரணத்தை ஆய்வு செய்யும் பணிகளை துவங்கி விட்டோம். அடுத்த சில நாட்களில் இந்த சம்பவத்திற்கான காரணம் பற்றி அதிக தகவல்கள் வெளியாகும். இந்த ஸ்கூட்டரை பயன்படுத்தி வந்த வாடிக்கையாளருடன் தொடர்ந்து பேசி வருகிறோம். அவர் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கிறார்."
"ஓலாவை பொருத்தவரை வாகன பாதுகாப்பு எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எங்களது பொருட்கள் அனைத்தும் அதிக தரமுள்ளதாக இருக்க வேண்டும் என்பதில் எப்போதும் கவனம் செலுத்தி வருகிறோம். இந்த சம்பவத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டு, தேவையான நடவடிக்கையை நிச்சயம் எடுப்போம். இதுபற்றி கூடுதல் தகவல்களை வெளியிடுவோம்," என ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ரிவர்ஸ் மோட் குறைபாடு:
ஓலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்தது மட்டுமின்றி, சமீபத்தில் ஓலா S1 ப்ரோ ஸ்கூட்டரில் ரிவர்ஸ் மோட் தானாக ஆன் ஆகி, மிக அதிக வேகத்தில் சென்றது. ஸ்கூட்டரின் மென்பொருளில் திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த சம்பவம் நடந்தது என தகவல் வெளியாகி வந்தது. இது மட்டும் இன்றி, சில ஓலா S1 ப்ரோ வாடிக்கையாளர்கள் ஸ்கூட்டரை முழு சார்ஜ் செய்து சிறிது தூரம் சென்றதும் அவை ஷட்-டவுன் ஆகி விடுவதாக குற்றம்சாட்டினர்.