WhatsApp 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வாட்ஸ்அப் புதிய பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. பெற்றோர்கள் இனி எளிதாகக் கண்காணிக்கலாம்.- எப்படி வேலை செய்கிறது?
இன்றைய டிஜிட்டல் உலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வாட்ஸ்அப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாத ஒன்றாகியுள்ளது. குறிப்பாக 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகள் அல்லது குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்க வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். ஆனால், அவர்களது பாதுகாப்பில் பெற்றோர்களுக்கு எப்போதும் ஒரு அச்சம் இருந்து கொண்டே இருக்கும். இந்த கவலையைப் போக்க மெட்டா (Meta) நிறுவனம் தற்போது அதிரடியான ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.
சிறுவர்களுக்கான பிரத்யேக 'Parent-Managed Accounts'
வாட்ஸ்அப் நிறுவனம் 13 வயதுக்குட்பட்ட பயனர்களுக்காக 'Parent-Managed Accounts' எனும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் வாட்ஸ்அப் கணக்கை முழுமையாகக் கண்காணித்து கட்டுப்படுத்த முடியும். குழந்தைகள் யாரிடம் பேசுகிறார்கள், எந்தக் குழுக்களில் இணைகிறார்கள் என்பதை இனி பெற்றோர்களே தீர்மானிக்கலாம்.
பெற்றோர்களின் கையில் முழு அதிகாரம்
இந்த புதிய வசதியின் கீழ், அறிமுகமில்லாத எண்களில் இருந்து வரும் மெசேஜ் ரெக்வெஸ்ட்களை (Message Requests) குழந்தைகள் நேரடியாகப் பார்க்க முடியாது. அதற்குப் பதிலாக அவை பெற்றோர்களின் அனுமதிக்குக் காத்திருக்கும். பெற்றோர்கள் ஓகே சொன்னால் மட்டுமே அந்த உரையாடல் தொடரும். மேலும், குழந்தைகள் தன்னிச்சையாகப் பாதுகாப்பு அமைப்புகளை (Privacy Settings) மாற்ற முடியாதபடி, 6 இலக்க ரகசிய 'Parent PIN' வசதியும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
எந்தெந்த அம்சங்களுக்குத் தடை?
குழந்தைகளின் பாதுகாப்பைக் கருதி, இந்த வகை கணக்குகளில் சில பொதுவான அம்சங்கள் நீக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் (Status), சேனல்கள் (Channels) மற்றும் மெட்டா ஏஐ (Meta AI) போன்ற வசதிகள் 13 வயதுக்குட்பட்டோருக்கான கணக்குகளில் செயல்படாது. இது குழந்தைகள் தேவையற்ற உள்ளடக்கங்களைப் பார்ப்பதைத் தவிர்க்க உதவும் என வாட்ஸ்அப் கூறுகிறது.
புதிய அக்கவுண்ட் செட்-அப் செய்வது எப்படி?
உங்கள் குழந்தையின் வாட்ஸ்அப் கணக்கை பாதுகாப்பாக மாற்ற கீழே உள்ள எளிய வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்:
1. குழந்தையின் போனில் வாட்ஸ்அப்பைத் தரவிறக்கம் செய்து, மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.
2. அதில் உள்ள 'More Options' பகுதிக்குச் சென்று 'Create a Parent-Managed Account' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
3. குழந்தையின் மொபைல் எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு உறுதிப்படுத்தவும்.
4. இப்போது உங்கள் (பெற்றோரின்) போனில் வாட்ஸ்அப்பைத் திறந்து, குழந்தையின் போனில் தோன்றும் QR கோடை ஸ்கேன் செய்யவும்.
5. நீங்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர் என்பதை உறுதிப்படுத்திய பின், 6 இலக்க 'Parent PIN' ஒன்றை உருவாக்கவும்.
6. இறுதியாக குழந்தையின் போனில் இந்தப் பின் எண்ணை உள்ளிட்டால் செட்-அப் முடிந்தது.
பாதுகாப்பான டிஜிட்டல் உலகம்
கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குச் சமூக வலைத்தள தடையைப் பற்றி ஆலோசித்து வரும் வேளையில், மெட்டா நிறுவனம் இத்தகைய 'Parental Control' அம்சங்களைக் கொண்டு வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. முழுமையான தடையை விட, பெற்றோரின் கண்காணிப்பில் பாதுகாப்பான பயன்பாடே சிறந்தது என அந்நிறுவனம் நம்புகிறது.


