18 லட்சம் அக்கவுண்ட்களை துவம்சம் செய்த வாட்ஸ்அப் - எதற்கு தெரியுமா?
வாசட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவதில்இருந்து சுமார் 18 லட்சம் பயனர்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
வாட்ஸ்அப் நிறுவனம் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் சுமார் 18 லட்சத்து 58 ஆயிரம் அக்கவுண்ட்களை இந்தியாவில் தடை செய்து இருப்பதாக அறிவித்து இருக்கிறது. தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் படி ஒவ்வொரு மாதமும் எத்தனை அக்கவுண்ட்கள் தடை செய்யப்படுகின்றன என்ற விவரங்களை வாட்ஸ்அப் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தான் ஜனவரி 1, 2022 முதல் ஜனவரி 31, 2022 வரை சுமார் 18 லட்சம் அக்கவுண்ட்கள் தடை செய்யப்பட்டதாக வாட்ஸ்அப் அறிவித்து உள்ளது.
வாட்ஸ்அப் விதிகளை மீறியதாலே பெரும்பாலான அக்கவுண்ட்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இதுதவிர பயனர்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலும் அக்கவுண்ட்கள் தடை செய்யப்பட்டுள்ளன. ஜனவரி மாதத்தில் மட்டும் 285 குற்றச்சாட்டுகளை வாட்ஸ்அப் எதிர்கொண்டுள்ளது. அவற்றில் 24 அக்கவுண்ட்களை வாட்ஸ்அப் தடை செய்து இருக்கிறது.
ஏற்கனவே பதிவிடப்பட்ட குற்றச்சாட்டுகளே மீண்டும் பதிவாகி இருப்பின் அவற்றை மட்டும் வாட்ஸ்அப் நடவடிக்கைக்கு எடுத்துக் கொள்ளாது. மற்றப்படி பயனர் தெரிவிக்கும் அனைத்து விதமான குற்றச்சாட்டுகளையும் வாட்ஸ்அப் பரிசீலனை செய்து, தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒரு அக்கவுண்ட் தடை செய்யப்பட்டாலோ அல்லது தடை செய்யப்பட்ட அக்கவுண்ட் மீட்கப்பட்டாலோ குறிப்பிட்ட அக்கவுண்ட் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக எடுத்துக் கொள்ள முடியும்.
வாட்ஸ்அப் தளத்தில் குற்றச்சாட்டுகளை இருவிதமாக பதிவு செய்ய முடியும். ஒன்று grievance_officer_wa@support.whatsapp.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு குற்றச்சாட்டுகளை எழுதுவது. மற்றொன்று குறைதீர்க்கும் அதிகாரிக்கு கடிதம் எழுதுவதன் மூலம் பயனர்கள் தங்களின் குற்றச்சாட்டுகளை பதிவிடலாம். குறைதீர்க்கும் சேனலில் பயனர் குற்றச்சாட்டுகளை பரிசீலனை செய்வதோடு தளத்தில் ஏதேனும் சர்ச்சைக்குரிய பயன்பாடு அரங்கேறுகிறதா என்பதை பிரத்யேக டூல்களை வாட்ஸ்அப் பயன்படுத்துகிறது.
தடை செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
அக்கவுண்ட் தடை செய்யப்படுவதை வாட்ஸ்அப் முன்கூட்டியே எச்சரிக்கை செய்யாது. அக்கவுண்ட் தடை செய்யப்பட்டால், வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முயற்சிக்கும் போது - “Your phone number is banned from using WhatsApp. Contact support for help.” இதுபோன்ற தகவல் திரையில் தோன்றும். ஏன் உங்களின் அக்கவுண்ட் தடை செய்யப்பட்டது என தெரியவில்லை எனில், இதுகுறித்து வாட்ஸ்அப்-க்கு மின்னஞ்சல் அனுப்பலாம். இவ்வாறு செய்யும் போது ஏன் அக்கவுண்ட் தடை செய்யப்பட்டது என வாட்ஸ்அப் தரப்பில் ஆய்வு செய்யப்படும்.