71 லட்சம் பயனர்களை தடை செய்த வாட்ஸ்அப்! விதிமுறைகளை மீறினால் இதுதான் நடக்கும்!
ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 30 வரை மொத்தம் 7,182,000 கணக்குகளை வாட்ஸ்அப் தடை செய்துள்ளது. இவற்றில் 1,302,000 கணக்குகள் பயனர்களிடம் இருந்து எந்த புகாரும் வருவதற்கு முன்பே நடவடிக்கை எடுத்துத் தடை செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மாதமும், மோசடி செய்பவர்கள், தனியுரிமைக் கொள்கைகளை மீறுபவர்கள் என லட்சக்கணக்கான பயனர்களை வாட்ஸ்அப் நிறுவனம் தடை செய்து வருகிறது. அந்த வகையில் சமீபத்திய மாதாந்திர அறிக்கையில், ஏப்ரல் 1, 2024 முதல் ஏப்ரல் 30, 2024 வரை சுமார் 71 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்பட்டதாகக் கூறியிருக்கிறது.
தவறான பயன்பாட்டைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அறிக்கையில் சொல்லப்படுகிறது. தொடர்ந்து விதிகளை மீறினால், மேலும் பல பயனர்களின் கணக்குகளைத் தடைகளை செய்ய இருப்பதாகவும் வாட்ஸ்அப் நிறுவனம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 30 வரை மொத்தம் 7,182,000 கணக்குகளை வாட்ஸ்அப் தடை செய்துள்ளது. இவற்றில் 1,302,000 கணக்குகள் பயனர்களிடம் இருந்து எந்த புகாரும் வருவதற்கு முன்பே நடவடிக்கை எடுத்துத் தடை செய்யப்பட்டுள்ளன. வாட்ஸ்அப்பை சந்தேகத்திற்கிடமான செயல்களுக்கு பயன்படுத்துவதை அடையாளம் காண மேம்பட்ட இயந்திர கற்றல் மற்றும் தரவு பகுப்பாய்வு முறைகளைப் பயன்படுத்துவதாக வாட்ஸ்அப் கூறியுள்ளது.
குறிப்பிடத்தக்க வகையில், ஏப்ரல் 2024இல், பல்வேறு காரணங்களுக்காக பயனர்களிடம் இருந்து 10,554 புகார்களை வாட்ஸ்அப் பெற்றுள்ளது. ஆனால், இந்த புகார்களின் அடிப்படையில் 6 கணக்குகள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021 க்கு இணங்க வாட்ஸ்அப் கணக்குகளில் தவறான செயல்பாடுகளுக்கு எதிராக பல பயனர்களின் கணக்குகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
ஜூன் 2024 மாத அறிக்கையில், வாட்ஸ்அப்பில் பயனர்களின் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க மேம்பட்ட அதிநவீன வசதிகளைக் கொண்டுவந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ்அப் ஏன் கணக்குகளை தடை செய்கிறது?
வாட்ஸ்அப் அதன் பயனர்களுக்கு பாதுகாப்பான சூழலை பராமரிக்க பயனர் கணக்குகளை தடை செய்கிறது. இந்தக் கணக்குகளைத் தடை செய்வதற்கான சில முக்கிய காரணங்கள் உள்ளன.
1. சேவை விதிமுறைகளை மீறுதல்: ஸ்பேம், மோசடிகள், தவறான தகவல் மற்றும் தீங்கு விளைவிக்கும் தகவல்களை பரப்புவது சேவை விதிமுறைகளை மீறியதாகக் கருதப்படும்.
2. சட்ட மீறல்கள்: இந்தியச் சட்டங்களை மீறும் கணக்குகள் உடனடியாகத் தடைசெய்யப்படும்.
3. தவறான நடத்தை: வாட்ஸ்அப் பயனர்களிடம் தவறாக நடந்துகொள்வது தொடர்பான புகார் வந்தால் அதன் அடிப்படையில் வாட்ஸ்அப் நடவடிக்கை எடுக்கும்.
வாட்ஸ்அப் கணக்குகளை எப்படி தடை செய்கிறது?
வாட்ஸ்அப் தவறான பயன்பாட்டைக் கண்டறிய பல அம்ச அணுகுமுறையைப் பயன்படுத்துகிறது. வாட்ஸ்அப் கணக்கு உருவாக்கும்போதே சந்தேகத்திற்குரிய பதிவுகளைக் கண்டறிந்து தடுக்கும் அம்சங்களை வாட்ஸ்அப் வைத்திருக்கிறது. இதன் மூலம் சந்தேகத்துக்கு இடமான நப்ரகள் வாட்ஸ்அப்பில் கணக்கு தொடங்கவே முடியாமல் தடுக்கப்படுகின்றனர்.
ஸ்பேம் செய்திகள், அச்சுறுத்தல்கள் அல்லது தவறான தகவல் பரப்புவதைக் கண்டறைய பிரத்யேக அல்காரிதங்களையும் வாட்ஸ்அப் பயன்படுத்துகிறது. வாட்ஸ்அப் தனது பயனர்களின் கருத்தை தீவிரமாக எடுத்துக்கொள்கிறது. பயனர்கள் புகாரளிக்கும்போது வாட்ஸ்அப் அது குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கிறது.