WhatsApp '@All' Feature வாட்ஸ்அப் குரூப் சாட்களில் அனைவரையும் ஒரே நேரத்தில் டேக் செய்ய '@all' வசதி வருகிறது. இதன் மூலம் முக்கியமான மெசேஜ்கள் மிஸ் ஆகாது. பெரிய குரூப்களில் அட்மின் கட்டுப்பாடுகள் பற்றிய விவரங்கள் இங்கே.

நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட வாட்ஸ்அப்பின் ‘@all’ அல்லது ‘அனைவரையும் டேக்’ (Mention Everyone) செய்யும் வசதி தற்போது ஆண்ட்ராய்டு பீட்டா பயனர்களுக்குப் படிப்படியாக வெளியாகி வருகிறது. இந்தக் கருவி குரூப் உரையாடலை இன்னும் எளிதாக்கும் நோக்குடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒரே ஒரு டேக் பயன்படுத்தி குரூப்பில் உள்ள அத்தனை உறுப்பினர்களுக்கும் முக்கியமான தகவலை உடனடியாகக் கொண்டு சேர்க்க முடியும். இந்த வசதி தற்போது 2.25.31.9 என்ற ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பின் ஒரு பகுதியாகச் சில பயனர்களுக்குக் கிடைக்கிறது.

அனைவரும் கவனிக்க வேண்டிய செய்திகள்

முன்னதாக உருவாக்கத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்ட இந்த ‘அனைவரையும் டேக்’ செய்யும் தெரிவு (Option) தற்போது மென்ஷன் (Mention) மெனுவில் இடம்பெறுகிறது. இந்தக் குறுக்குவழி (Shortcut) மூலம் குரூப்பில் உள்ள அனைவருக்கும் எளிதாக அலர்ட் (Alert) அனுப்ப முடியும். குறிப்பாக, ஒரு சிலர் நோட்டிஃபிகேஷன்களை (Notifications) முடக்கி (Muted) வைத்திருந்தாலும், முக்கியமான செய்திகள் கவனிக்கப்படாமல் போவதைத் இது தடுக்கும். பெரிய அணிகள், சமூகங்கள் மற்றும் குடும்பக் குழுக்களில் முக்கியமான செய்திகள் அல்லது நினைவூட்டல்களைப் (Reminders) பகிர இந்த வசதி மிகவும் உதவியாக இருக்கும்.

குரூப்பின் அளவுக்கேற்ப கட்டுப்பாடுகள்

குரூப் சாட்டில் ‘@all’ வசதியானது ஒவ்வொருவரையும் தனித்தனியாக டேக் செய்யாமல், குரூப்பில் உள்ள அத்தனை நபர்களையும் ஒரே கட்டளையில் மென்ஷன் செய்ய உதவுகிறது. இருப்பினும், இந்த வசதி தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்கவும், தேவையில்லாத நோட்டிஃபிகேஷன்களைத் தவிர்க்கவும் வாட்ஸ்அப் சில பயன்பாட்டுக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சிறிய குரூப்களில் அனைவரும் '@all' மென்ஷனைப் பயன்படுத்தலாம். ஆனால், தற்போதுள்ள தகவலின்படி, 32 உறுப்பினர்களுக்கு மேல் உள்ள பெரிய குரூப்களில் அட்மின்களுக்கு (Admins) மட்டுமே இந்த வசதியைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்படும் என்று WABetaInfo தெரிவித்துள்ளது.

பயனர்களுக்கு நோட்டிஃபிகேஷன் கட்டுப்பாடு

அதிகமான மற்றும் ஆக்டிவ் குரூப்களில் (Active Groups) உறுப்பினராக இருப்பவர்களுக்கு வசதியாக, '@all' மென்ஷன்களுக்கு வரும் நோட்டிஃபிகேஷன்களை முடக்குவதற்கான (Mute) புதிய அமைப்பையும் (Setting) வாட்ஸ்அப் சோதித்து வருகிறது. ஒருவர் குரூப்பை முடக்கி வைத்திருந்தாலும், அவர்களுக்கு '@all' மென்ஷன் மூலம் நோட்டிஃபிகேஷன் செல்ல வேண்டுமா இல்லையா என்பதை பயனரே தீர்மானிக்கும் வகையில் இந்தக் கட்டுப்பாடு இருக்கும். இந்தத் தெரிவுகளை குரூப் தகவல் பகுதியில் உள்ள நோட்டிஃபிகேஷன் அமைப்புகளில் கண்டறியலாம். இதன் மூலம், முக்கியமான செய்திகளை தவறவிடாமல், அதே நேரத்தில் தொடர்ந்து வரும் அலர்ட்களையும் பயனர்கள் கட்டுப்படுத்த முடியும்.

பீட்டா பயனர்களுக்குப் படிப்படியான வெளியீடு

இந்த '@all' மென்ஷன் வசதி தற்போது சில பீட்டா பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் சில வாரங்களில் அதிக பயனர்களுக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சோதனைக்குப் பிறகு, இந்த வசதி முதலில் அனைத்து ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும், அதைத் தொடர்ந்து iOS பயனர்களுக்கும் நிலையான பதிப்பாக (Stable Build) வெளியிடப்படும். இந்த அப்டேட் மூலம், வாட்ஸ்அப் குரூப் உரையாடலில் வசதியையும், அதே சமயம் பயனர் கட்டுப்பாட்டையும் சமநிலைப்படுத்த முயற்சிக்கிறது.