மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் மென்பொருள் முடக்கம்; உலகம் முழுவதும் பாதிப்பு சரி செய்வது எப்படி? Microsoft விளக்கம்!
Microsoft: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா,ஜெர்மனி போன்ற பிற நாடுகள் உட்பட உலகெங்கிலும் உள்ள பல தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் ஒரே ஒரு பிரச்சனையால் சிக்கி தவித்து வருகிறது. புளூ ஸ்கிரீன் ஆஃப் டெத் என்ற சிக்கல் வின்டோஸில் ஏற்பட்டது இதற்கு முக்கிய காரணம் ஆகும்.
உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான விண்டோஸ் கணினிகள் இன்று கடுமையான தொழில்நுட்பச் சிக்கலில் சிக்கியுள்ளது. திடீரென பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனத்தை சேர்ந்த பணியாளர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய Crowd Strike அப்டேட் காரணமாக இந்த பிழை ஏற்பட்டுள்ளதாக Microsoft Inc. மைக்ரோசாப்டின் சேவை மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மைக்ரோசாஃப்ட் தரப்பில் தெரிவித்துள்ள விளக்கத்தின்படி, “எங்கள் Azure பின் தளப் பணியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சிக்னல் பிரச்சனை உண்டாகி இருக்கிறது. இப்பிரச்சனையை தீர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்" என்று மைக்ரோசாஃப்ட் விளக்கம் தெரிவித்துள்ளது.
க்ரோவ்ட் ஸ்ட்ரைக் இன்ஜினியரிங் (Crowd Strike Engineering) என்பது மைக்ரோசாப்ட் உடன் பணிபுரியும் சைபர் செக்யூரிட்டி சேவை நிறுவனம் ஆகும். பலருக்கு நீல நிற ஸ்க்ரீன் தெரிவதாக புகார் தெரிவித்துள்ள நிலையில், விண்டோஸ் பயனர்களுக்கு முக்கிய அறிவுரைகளை மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதற்கான தீர்வு என்ன என்பதை பார்க்கலாம். விண்டோஸில் C:\Windows\System32\drivers\CrowdStrike கோப்பகத்திற்கு செல்லவும். C-00000291*.sys பொருந்தக்கூடிய கோப்பைக் கண்டறிந்து அதை நீக்கவும். ஹோஸ்டை சாதாரணமாக துவக்கவும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் விண்டோஸ் முடக்கம் ஆனது உலகம் முழுவதும் முக்கிய செயல்பாடுகளை முடக்கி உள்ளது. இந்தியாவில், ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு மற்றும் செக்-இன் மற்றும் பிற செயல்பாடுகளை பாதித்த "தொழில்நுட்ப சவால்களை" சந்தித்து வருவதாக SpiceJet கூறியுள்ளது. புதிய விமான நிறுவனமான ஆகாசா ஏர் மற்றும் தொழில்துறையைச் சேர்ந்த இண்டிகோ போன்ற நிறுவனங்களும் இந்த முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.