Volkswagen Virtus : ப்ரோடக்ஷன் தொடங்கிடுச்சு.. அடுத்து வெளியீடு மட்டும் தான்... ஃபோக்ஸ்வேகன் அசத்தல்..!
Volkswagen Virtus : ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மாடலில் 10 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 8 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு உள்ளன.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் புதிய விர்டுஸ் மாடல் உற்பத்தியை இந்தியாவில் துவங்கி இருப்பதாக அறிவித்து இருக்கிறது. புகிய விர்டுஸ் மாடலின் உற்பத்தி மகாராஷ்டிரா மாநிலத்தில் இயங்கி வரும் சக்கன் உற்பத்தி ஆலையில் நடைபெற்று வருகிறது. இந்திய சந்தையில் புதிய ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மாடல் விற்பனை மே மாத வாக்கில் துவங்க இருக்கிறது. புதிய ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மாடல் இரண்டு விதமான என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும்.
ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் ஹைலைட்ஸ்:
புதிய ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மாடல் ஸ்கோடா ஸ்லேவியா மாடலை போன்றே MQB AO IN பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் இரண்டு விதமான டர்போ பெட்ரோல் என்ஜின் - 1.0 லிட்டர், 3 சிலிண்டர் TSI மற்றும் 1.5 லிட்டர், 4 சிலிண்டர், TSI ஆப்ஷன்களில் கிடைக்கும். இவை முறையே 115 பி.ஹெச்.பி. பவர், 175 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 150 ஹெச்.பி. திறன், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் 1.0 TSI வேரியண்ட்கள் டைனமிக் என்றும் 1.5 TSI வேரியண்ட்கள் பெர்ஃபார்மன்ஸ் என்றும் இருவித லைன்களில் கிடைக்கும். இதன் 1.0 TSI வேரியண்டில் 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் என இருவித டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 1.5 TSI வேரியண்ட் 7 ஸ்பீடு DCT கியர்பாக்ஸ் உடன் மட்டுமே வழங்கப்படுகறது.
அம்சங்கள்:
ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மாடலில் 10 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 8 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், வயர்லெஸ் போன் சார்ஜிங், கனெக்டெட் கார் தொழில்நுட்பம், வெண்டிலேடெட் முன்புற இருக்கைகள், சன்ரூஃப், ஆம்பியண்ட் லைட்டிங், கூல்டு கிளவ் பாக்ஸ், ஆட்டோ ஹெட்லேம்ப் மற்றும் வைப்பர்கள் வழங்கப்பட்டு உள்ளன.
பாதுகாப்பிற்கு ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மாடலில் டையர் பிரெஷர் மாணிட்டர், ஆறு ஏர்பேக், ESC, ஹில் ஹோல்டு கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் GT வேரியண்டின் டேஷ்போர்டில் ரெட் நிற டி-டெயிலிங் செய்யப்பட்டு இருக்கிறது. இவை காருக்கு ஸ்போர்ட் ஃபீல் வழங்கும்.
வெளியீட்டு விவரம்:
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் புதிய விர்டுஸ் மாடலுக்கான முன்பதிவை மார்ச் 8 ஆம் தேதியை துவங்கியது. எனினும், இதன் வெளியீடு மே மாதம் தான் நடைபெறும் என ஏற்கனவே அறிவித்து விட்டது. இந்திய சந்தையில் வெளியிடப்பட்டதும், புதிய ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மாடல் ஸ்கோடா ஸ்லேலியா, மிட்-சைஸ் செடான் மாடல்களான ஹோண்டா சிட்டி, ஹீண்டாய் வெர்னா மற்றும் மாருதி சியாஸ் போன்ற உள்ளிட்டவைகளுக்கு போட்டியாக அமையும்.