மஹிந்திரா XUV700 அதிவேகமாக வந்து மோதியதில் தமிழ் நாடு அரசு பேருந்து சாலையின் ஓரத்திற்கே தள்ளப்பட்டு விட்டது.

ஹைவே ரோட்டில் விபத்து ஏற்படுவது சாதாரண விஷயம் தான். நீண்ட நெடிய சாலைகளில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டும் போது சமயத்தில் கவன குறைவு காரணமாக வாகனத்தின் கட்டுப்பாட்டை இழப்பது, வாகனம் ஓட்டும் போது அசதியில் உறங்கி விடுவது, சாலை விதிகளை மீறுவது என பல்வேறு காரணங்களால் விபத்துக்கள் அரங்கேறி வருகின்றன. விபத்துக்களை தடுக்க அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வந்த போதும், மக்கள் விதிகளை பின்பற்ற துவங்கும் வரை விபத்து எண்ணிக்கையை குறைப்பது சவாலான காரியம் தான். 

சமீப காலங்களில் பலமுறை வாகன விபத்து ஏற்படும் பரபர காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டு இருக்கின்றன. அந்த வகையில் தனியார் செய்தி நிறுவனம் ஒன்று தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் விபத்து வீடியோ சமூக வலைதளங்ளில் வைரல் ஆகி இருக்கிறது. மேலும் இந்த வீடியோவினை மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திராவும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

ஊழியர்களுக்கு பாராட்டு:

மேலும் விபத்து குறித்த பதிவில், தனது நிறுவன ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவித்து இருக்கிறார். விபத்து வீடியோ பார்த்து ஆனந்த் மஹிந்திரா ஏன் பாராட்டு தெரிவிக்க வேண்டும்? விபத்து வீடியோவுக்கு காரணமாக அமைந்ததே மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த XUV700 மாடல் தான். ஹைவே ரோட்டில் அதிவேகமாக காற்றை கிழித்துக் கொண்டு வந்த மஹிந்திரா XUV700 சாலை கடக்க முற்பட்ட தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் பேருந்து மீது பட்டென மோதியது.

மஹிந்திரா XUV700 அதிவேகமாக வந்து மோதியதில் தமிழ் நாடு அரசு பேருந்து சாலையின் ஓரத்திற்கே தள்ளப்பட்டு விட்டது. மேலும் பேருந்தின் பம்ப்பரில் பெரும் சேதம் அடைந்தது. சரி காருக்கு என்ன ஆனது? அத்தனை வேகத்தில் வந்து அரசு பஸ்-ஐ பதம் பார்த்த போதிலும் மஹிந்திரா XUV700 காரின் முன்புறம் சேதம் அடைந்தது. எனினும், அதில் பயணம் செய்தவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும் காருக்கு மிக அதிக சேதம் அடையவில்லை.

Scroll to load tweet…

ஆனந்த் மஹிந்திரா:

காரில் பயணித்தவர்கள் விபத்தில் சிக்கிய போதும், பாதுகாப்பாக இருப்பதை காரணம் காட்டி தான் ஆனந்த் மஹிந்திரா தனது நிறுவன ஊழியர்களை பாராட்டினார். இதுகுறித்த டுவிட்டர் பதிவில் அவர், "முதலில் பயணிகளுக்கு எதுவும் ஆகாததற்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எங்களின் அனைத்து வாகனங்களிலும் பாதுகாப்பு மட்டுமே மிக முக்கிய குறிக்கோள் ஆகும். இந்த செய்தி இதே குறிக்கோளை மேலும் உறுதிப்படுத்தி இருக்கிறது. டிசைன்களில் இதனை சாத்தியப்படுத்திய எனது குழுவுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இந்த சம்பவம் அவர்களுக்கு மேலும் வளர்ச்சியை பெற ஊக்குவிக்கும் என நம்புகிறேன்," என குறிப்பிட்டு இருக்கிறார். 

மஹிந்திரா நிறுவனத்தின் XUV700 மாடல் குளோபல் NCAP பாதுகாப்பு பரிசோதனையில் ஐந்து நடசத்திர குறியீடுகளை பெற்று அசத்தி இருந்தது. பெரியவர்கள் பாதுகாப்பிற்கு ஐந்து நட்சத்திர குறியீடுகளையும், சிறுவர்கள் பாதுகாப்பிற்கு நான்கு நட்சத்திர குறியீடுகளையும் பெற்று இருந்தது. மஹிந்திரா XUV700 மாடல் மொத்தம் ஏழு ஏர்பேக் கொண்டிருக்கிறது. இத்துடன் எலெக்டிரானிக் ஸ்டேபிலிட்டி வசதி, கார்னெரிங் லேம்ப்கள், 360 டிகிரி கேமரா, பிளைண்ட் வியூ மாணிட்டரிங், ஏராளமான டிரைவர் அசிஸ்டண்ட் வசதிகள், ஃபிரண்ட் கொலிஷன் வார்னிங், ஆட்டோமேடிக் எமர்ஜென்சி பிரேக்கிங் சிஸ்டம், லேண் கீப் அசிஸ்ட், ஸ்மார்ட் பைலட் அசிஸ்ட் போன்ற அம்சங்கள் புதிய மஹிந்திரா XUV700 மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது.

Image Source: MotoWagon