வோடபோன் ஐடியா (Vi) தனது புதிய 'நான்ஸ்டாப் ஹீரோ' திட்டத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் அன்லிமிடெட் டேட்டா, அழைப்புகள் மற்றும் SMS சலுகைகளை வழங்குகிறது.

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடபோன் ஐடியா (Vi), தனது புதிய 'நான்ஸ்டாப் ஹீரோ' திட்டத்தை கேரளா மாநிலத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது இந்தியாவில் முதல் முறையாக வழங்கப்படும் உண்மையான அன்லிமிடெட் டேட்டா சலுகை ஆகும். இந்த திட்டத்தின் மூலம் பிரீபெய்டு வாடிக்கையாளர்கள் இனி டேட்டா முடிந்து விடுமா என்ற கவலையின்றி தொடர்ச்சியான இணைய இணைப்பைப் பெற முடியும்.

டேட்டா வழங்கும் ஹீரோ திட்டம்

'நான்ஸ்டாப் ஹீரோ' திட்டம் வாடிக்கையாளர்களுக்கு தடையில்லா இணைய அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் அதிவேக இணைய தேவை மற்றும் டிஜிட்டல் பயன்பாடுகளை கணக்கில் எடுத்துக்கொண்டு இந்த திட்டம் அறிமுகமாகியுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் எந்த நேரத்திலும் வீடியோ பார்வை, கேமிங் மற்றும் சமூக ஊடக பயன்பாடுகளை தடையின்றி பயன்படுத்தலாம்.

மூன்று விலைகளில் அறிமுகம்

வோடபோன் ஐடியா தனது நான்ஸ்டாப் ஹீரோ திட்டத்தை ரூ.398, ரூ.698 மற்றும் ரூ.1048 என்ற மூன்று திட்டங்களாக கேரளாவில் வெளியிட்டுள்ளது. ரூ.398 திட்டம் 28 நாட்கள், ரூ.698 திட்டம் 56 நாட்கள், ரூ.1048 திட்டம் 84 நாட்கள் வரை செல்லுபடியாகும்.

விஐ அன்லிமிடெட் அழைப்புகள்

இந்த மூன்று திட்டங்களிலும் நாள் முழுவதும் அன்லிமிடெட் டேட்டா, அன்லிமிடெட் குரல் அழைப்புகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் அனுப்பும் சலுகையும் வழங்கப்படுகிறது. முக்கியமாக, இந்த திட்டங்கள் தனிப்பட்ட பயனர்களுக்கே வழங்கப்படுகின்றன; வணிக ரீதியான பயன்பாட்டிற்காக இந்த திட்டங்கள் இல்லை.

பல்வேறு மாநிலங்களிலும் விரிவாக்கம்

கேரளாவைத் தொடர்ந்து, விஐ நிறுவனம் தனது நான்ஸ்டாப் ஹீரோ திட்டத்தை இந்தியாவின் பல மாநிலங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், உத்தரப் பிரதேசம் (கிழக்கு), ஹரியானா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, ராஜஸ்தான், ஒடிசா, மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் உள்ளிட்ட பல பகுதிகள் அடங்குகின்றன.

தடையில்லா இணையம்

இந்த திட்டம் வோடபோன் ஐடியாவிற்கு ஒரு திருப்புமுனையாக இருக்கக்கூடும். நான்ஸ்டாப் ஹீரோ திட்டம் மூலம் நிறுவனத்தின் வாடிக்கையாளர் அடிப்படை வலிமை மேலும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இனி வாடிக்கையாளர்கள் எந்த நேரத்திலும் பாதுகாப்பாகவும் இணையத்தை அனுபவிக்க முடியும்.