OTP மெசேஜ்க்கும் கட்டணம்! Twitter பயனர்களுக்கு எலான் மஸ்க் விளக்கம்!!
டுவிட்டர் கணக்கின் பாதுகாப்பு அம்சங்களில் ஒன்றான OTP மெசேஜ்க்கு இனி கட்டணம் விதிக்கப்படும் என்று செய்திகள் வந்துள்ளன.
பயனர்கள் தங்களது டுவிட்டர் தளத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு, இருபடிநிலை சரிபார்ப்பு என்ற அம்சம் உள்ளது. அதாவது, டுவிட்டரில் உள்நுழைவதற்கு பயனர் பெயர், பாஸ்வேர்டு எண்டர் செய்த பிறகு, பயனர்களின் செல்போன் நம்பருக்கு OTP வரும், அந்த OTP பாஸ்வேர்டையும் எண்டர் செய்தால் தான் டுவிட்டருக்குள் நுழைய முடியும். இவ்வாறு SMSக்கு பதிலாக, ஆத்தேண்டிகேட்டர் (Authenticator) செயலிகள் மூலமாகவும் OTP குறியீடுகளை உருவாக்கி டுவிட்டருக்குள் உள்நுழையலாம்.
இந்த நிலையில், இருபடிநிலை சரிபார்ப்பு அம்சத்தில், OTP மெசேஜ் அனுப்பும் முறையில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் வரும் மார்ச் 20 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். இது தொடர்பாக டுவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள குறிப்பில் கூறியிருப்பதாவது, ‘ட்விட்டரில் மக்களைப் பாதுகாப்பாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க நாங்கள் தொடர்ந்து கடமைப்பட்டுள்ளோம்.
மேலும் உங்கள் கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருக்க நாங்கள் வழங்கும் முதன்மைப் பாதுகாப்புக் கருவி இருபடிநிலை பாதுகாப்பு (2FA). டுவிட்டரில் உள்நுழைவதற்கு கடவுச்சொல்லை மட்டும் பயன்படுத்தாமல், அதற்கு கூடுதலாக, 2FA முறையில் நீங்கள் ஒரு குறியீட்டை உள்ளிட வேண்டும் அல்லது ‘செக்யூரிட்டி கீ’ பயன்படுத்த வேண்டும். இன்றுவரை, நாங்கள் 2FA அம்சத்தில் மூன்று முறைகளை வழங்கியுள்ளோம்: எஸ்எம்எஸ், அங்கீகார செயலி மற்றும் செக்யூரிட்டி கீ.
துரதிர்ஷ்டவசமாக ஃபோன் எண் அடிப்படையிலான OTP மெசேஜ் முறைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை பார்த்திருக்கிறோம். எனவே இன்று முதல், கணக்குகள் ட்விட்டர் ப்ளூ சந்தாதாரர்களாக இல்லாவிட்டால், 2FA அம்சத்தில் SMS முறையில் பதிவுசெய்ய அனுமதிக்க மாட்டோம். ட்விட்டர் ப்ளூக்கான OTP மெசேஜ் என்பது அந்தந்த நாடுகளுக்கு ஏற்ப மாறுபடலாம்.
இப்படி செய்தால் போதும்.. உங்கள் ஸ்மார்ட்போனில் இன்டர்நெட் வேகத்தை அதிகரிக்கலாம்!
ட்விட்டரில் ப்ளூ சந்தாவில் இல்லாதவர்கள் ஏற்கனவே பதிவுசெய்துள்ள இந்த OTP முறையை மாற்றிவிட்டு, மீதமுள்ள ‘ஆத்தேண்டிகேட்டர் செயலி’ அல்லது ‘செக்யூரிட்டி கீ’ முறையில் பதிவுசெய்ய 30 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது. 20 மார்ச் 2023க்குப் பிறகு, ட்விட்டரில் ப்ளூ டிக் பெறாத சந்தாதாரர்களுக்கு OTP SMS பாதுகாப்பு அம்சம் வழங்கப்படாது’ இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுருக்கமாக சொல்லப்போனால், இனி டுவிட்டர் பயனர்கள் கட்டணம் செலுத்தி, ப்ளூ சந்தாவில் இணைந்தால் மட்டுமே OTP SMS பெற முடியும். இல்லையெனில் பெற முடியாது.
இந்த செய்திகுறிப்பை எலான் மஸ்க் ரீட்வீட் செய்து, பயனர்கள் OTP SMS தவிர, பிற ஆத்தேண்டிகேட்டர் ஆப் மூலமாக தங்கள் கணக்கை பாதுகாப்பாக வைக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.