Russia Ukraine Crisis: இதுதான் மிகமுக்கியம் - ஊழுயர்களுக்கு டிம் குக் அட்வைஸ்!
Russia Ukraine Crisis: உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஆப்பிள் நிறுவன ஊழியர்களுக்கு அதன் தலைமை செயல் அதிகாரி டிம் குக் கடிதம் எழுதி இருக்கிறார்.
ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் விவகாரம் பற்றி தனது ஊழியர்களுக்கு மின்னஞ்சலில் கடிதம் எழுதி இருக்கிறார். அதில் ஆப்பிள் சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பற்றி அவர் விளக்கி இருக்கிறார்.
"இப்போது நான் அனைத்து ஆப்பிள் ஊழியர்களுக்காக பேசுகிறேன். வன்முறையால் பாதிக்கப்பட்டு இருக்கும் அனைவருக்கும் எனது வருத்தங்களை வெளிப்படுத்தி கொள்கிறேன். தங்களின் வீடுகளை விட்டு வெளியேறும் குடும்பங்கள், நாட்டை காக்க வீரமாக போரிடும் அந்நாட்டு குடிமக்களின் ஒவ்வொரு புகைப்படத்தை பார்க்கும் போது, உலக மக்கள் அனைவரும் பொது அமைதியை நிலைநாட்ட ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை பார்க்கிறேன்."
"அகதிகள் நிலையை உணர்ந்து, பாதிக்கப்பட்டோருக்கான அத்தியாவசிய தேவைகள் வழங்குவது மற்றும் மீட்பு பணிகளுக்காக ஆப்பிள் நன்கொடை வழங்கி வருகிறது. மேலும் இதே பணியை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல இதர நிறுவனங்களுடன் இணைந்து இருக்கிறோம். இந்த பணியில் ஏதாவது வகையில் ஈடுபட வேண்டும் என உங்களில் பலர் நினைப்பது எனக்கு தெரியும். நன்கொடை வழங்குவதில் உங்களுக்கு உதவ நினைக்கிறோம்."
"உக்ரைன் மற்றும் அதன் அருகாமையில் உள்ள நமது குழுக்களுக்கு உதவ தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். உக்ரைனில் உள்ள ஒவ்வொரு ஊழியர் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கு முடிந்த உதவிகளை வழங்க முயற்சித்து வருகிறோம். நாட்டை விட்டு வெளியில் வசிக்கும் உக்ரைன் ஊழியர்கள் தேவையான உதவிகளை மின்னஞ்சலில் தெரியப்படுத்தலாம். இதுபற்றிய விவரங்களை அதற்கான வலைப்பக்கத்தில் தெரியப்படுத்தலாம்."
"நிறுவனமாக அனைத்து விதமான கூடுதல் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ரஷ்யாவில் அனைத்து விதமான சாதனங்களின் விற்பனையை நிறுத்தி இருக்கிறோம். இத்துடன் ரஷ்யாவுக்கான அனைத்து விதமான ஏற்றுமதிகளையும் நிறுத்தி இருக்கிறோம். ஆப்பிள் பே உள்பட பல்வேறு சேவைகளை கட்டுப்படுத்தி இருக்கிறோம். RT நியூஸ் மற்றும் ஸ்புட்னிக் நியூஸ் உள்ளிட்ட சேவைகள் ரஷ்யா தவிர அனைத்து நாடுகளின் ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.பொதுமக்கள் பாதுகாப்பு காரணமாக உக்ரைனில் ஆப்பிள் மேப்ஸ் சேவையும் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது."
"அங்குள்ள கள நிலவரத்தை தொடர்ந்து கவனத்து வருகிறோம். மேலும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுடன் தொடர்ந்து தகவல் பரிமாற்றம் செய்து, நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை அவர்களுக்கு தெரியப்படுத்தி வருகிறோம்."
"இப்போதைய சூழலில் ஒற்றுமை தான் மிகவும் முக்கியம். இந்த தருணத்தில் நாம் அனைவரும் பகிர்ந்து கொள்ளும் மனித நேயத்தை நாம் மறக்கவே கூடாது என இந்த சூழல் நமக்கு நினைவூட்டுகிறது. இதுபோன்ற கடினமான சூழலில், நாம் நமது பயனர்களுக்கும், ஒவ்வொருத்தருக்கும் நன்மை பயப்பதில் ஒற்றுமையாக இருக்கிறோம், உலக நன்மைக்கான நல்ல சக்தியாக இருக்கிறோம் என்பதில் பெருமை கொள்கிறேன்." என குறிப்பிட்டு இருக்கிறார்.