5G : 2022 இல் '5ஜி'.. கன்பார்ம் செய்த மத்திய அரசு.. இந்தியாவில் கால் பதிக்கும் புது டெக்னலாஜி..
இந்தியாவில் 5ஜி இணைய சேவைகள் 2022ல் தொடங்கப்படும் என்று மத்திய தொலைத்தொடர்பு துறை அறிவித்துள்ளது.
செல்போன் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விரைவில் தொடங்கப்படும் என மத்திய தொலைத்தொடர்புத்துறை அறிவித்திருந்தது. அதன்படி சென்னை, மும்பை ,கொல்கத்தா, பெங்களூரு, குருகிராம், சண்டிகர், டெல்லி ஜாம்நகர் ,அகமதாபாத், ஹைதராபாத், லக்னோ, புனே ,காந்தி நகர் ஆகிய பகுதிகளில் 5ஜி சேவை மையங்கள் தயார்நிலையில் உள்ளன.
இந்த நகரங்களில் நாட்டிலேயே முதலாவதாக 5ஜி சேவை வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அந்த வகையில் இந்தியாவில் 5ஜி இணைய சேவைகள் 2022இல் தொடங்கப்படும் என்று மத்திய தொலைத்தொடர்பு துறை அறிவித்துள்ளது. முதற்கட்டமாக சென்னை, டெல்லி உள்ளிட்ட 13 நகரங்களில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்புத் துறை 5G தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் சோதனைகளுக்காக புகழ்பெற்ற கல்லூரி நிறுவனங்களுடன் இணைந்துள்ளது. உள்நாட்டு 5ஜி சோதனை திட்டத்தில் நாட்டின் எட்டு கல்லூரிகள் ஈடுபட்டுள்ளன. அதில் ஐஐடி பாம்பே, ஐஐடி-டெல்லி, ஐஐடி-ஹைதராபாத், ஐஐடி-மெட்ராஸ், ஐஐடி-கான்பூர், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் பெங்களூர் (ஐஐஎஸ்சி), சொசைட்டி ஃபார் அப்ளைடு மைக்ரோவேவ் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் அண்ட் ரிசர்ச் மற்றும் சென்டர் ஃபார் எக்ஸலன்ஸ் வயர்லெஸ் தொழில்நுட்பம் (CEWiT) ஆகிய கல்லூரிகள் 36 மாதங்களாக சோதனை திட்டத்தில் உள்ளன.
தொலைத்தொடர்பு துறை இந்த ஆண்டு நேரடி அன்னிய முதலீடு 150 சதவிகிதம் உயர்ந்துள்ளது. உள்நாட்டு தொழில்நுட்பத்தை கொண்டு தொலைத் தொடர்புத் துறையால் சுமார் 224 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்படும் 5ஜி பரிசோதனை திட்டம் இறுதி கட்டத்தை எட்டி உள்ளதால், அது டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.