ஐபோனை சார்ஜ் போட்டுவிட்டு பக்கத்திலேயே தூங்காதீங்க! ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை!
மொபைல் சார்ஜ் செய்யப்படும் நிலையில் அருகில் வைத்து தூங்கும் நபர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் தெளிவான எச்சரிக்கை செய்தி ஒன்றை அளித்துள்ளது.
ஏற்கனவே பல ஆய்வுகள் உங்கள் ஃபோனுக்கு அருகாமையில் உறங்குவதால் ஏற்படும் அபாயங்கள் மற்றும் பின்விளைவுகளை எடுத்துரைத்துள்ளன. அந்தப் பழக்கம் செல்போன் பயனர்களின் ஆரோக்கியத்தைப் பாதிப்பது மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த வாழ்விலும் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்படுகிறது.
இந்நிலையில், ஐபோன்களின் உற்பத்தியாளரான ஆப்பிள் நிறுவனம், ஸ்மார்ட்போன்களை அருகில் வைத்துபக்கொண்டே தூங்கும் பழக்கம் கொண்ட நபர்களுக்கு, குறிப்பாக மொபைல் சார்ஜ் செய்யப்படும் நிலையில் அருகில் வைத்து தூங்கும் நபர்களுக்கு தெளிவான எச்சரிக்கை செய்தி ஒன்றை அளித்துள்ளது. இந்த எச்சரிக்கை ஆப்பிள் ஆன்லைன் பயனர் வழிகாட்டியில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த வழிகாட்டுதலில், ஐபோன்கள் நன்கு காற்றோட்டம் உள்ள மற்றும் மேசைகள் போன்ற தட்டையான பரப்புகளில் பிரத்தியேகமாக சார்ஜ் செய்யப்பட வேண்டும் என்று தொழில்நுட்ப நிறுவனம் அறிவுறுத்துகிறது.
Realme 11X 5G: இதுதான் நம்ம பட்ஜெட்டுக்கு ஏத்த 5G ஸ்டார்ட்போன்... கவர்ச்சிகரமான அறிமுகச் சலுகை!
மொபைலை சார்ஜிங் செய்யும்போது ஐபோன்கள் வெப்பத்தை உருவாக்குகின்றன. மொபைலைச் சுற்றி போதிய இடைவெளி இல்லை என்றால் இந்த வெப்பத்தை எளிதில் வெளியிட முடியாமல் போகும். இதுபோன்ற நிலையில் மிகக் கடுமையான சந்தர்ப்பங்களில், போன் தீப்பிடிக்கும் அபாயத்தையும் உண்டாக்கும். இதனால், அருகில் இருப்பவருக்கு தீக்காயங்களை ஏற்படுத்தும் ஆபத்தும் ஏற்படும்.
சார்ஜ் செய்யும் போனை தலையணைக்கு அடியில் வைப்பது, ஸ்மார்ட்போன் பயனர்கள் பலரும் செய்யக்கூடிய மிகவும் பாதுகாப்பற்ற செயல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
பவர் அடாப்டர் அல்லது வயர்லெஸ் சார்ஜர் எதன் மூலமாக மொபைலை சார்ஜ் செய்யும்போதும் அதன் அருகில் தூங்க வேண்டாம் என்று ஆப்பிள் நிறுவனம் அறிவுறுத்துகிறது. மேலும், போர்வைக்குள், தலையணைக்கு அடியில் சார்ஜ் ஆகும் மொபைலை வைக்கக்கூடாது என்றும் சொல்கிறது.
இன்னும் சிலர் சார்ஜ் ஆகும் மொபைல் மீது தங்கள் உடல் இருக்கும் நிலையில் தூங்குகிறார்கள். அவர்களையும் ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கிறது. பவர் அடாப்டர் மூலமோ எந்த வயர்லெஸ் சார்ஜர் மூலமோ மொபைல் போனை சார்ஜ் செய்யும்போது, நன்கு காற்றோட்டமான இடத்தில் வைத்திருக்க வேண்டும் என்றும் ஆப்பிள் நிறுவனம் தனது வழிக்காட்டுதல்களில் கூறியிருக்கிறது.
சேதமடைந்த கேபிள்கள் அல்லது சார்ஜர்களைப் பயன்படுத்த வேண்டாம், ஈரப்பதமான நிலையில் மொபைலை சார்ஜ் செய்யவேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது.