ஆபாசத்தைத் தடுக்க புதிய ஆயுதம்! சமூக ஊடகங்கள், வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களுக்கு மத்திய அரசின் கிடுக்கிப்பிடி!
இணையத்தில் ஆபாசமான பதிவுகள் மற்றும் அவதூறுகளைக் கட்டுப்படுத்த தேவையான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் வகுக்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது.
சமூக ஊடகங்கள் மற்றும் வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களில் ஆக்கிரமித்துள்ள ஆபாசமான பதிவுகள் மற்றும் அவதூறுகளைக் கட்டுப்படுத்த தேவையான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் வகுக்கப்படும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.
இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பிரமாணப் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. அதில், இணைத்தில் ஆபாசம் குறித்து டெல்லி உயர் நீதிமன்றம் வெளிப்படுத்திய கவலைகளை கவனத்தில் கொண்டு மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதாக கூறியிருக்கிறது.
சமூக ஊடகங்கள் மற்றும் OTT தளங்களில் உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை உருவாக்குவதற்கு அவசர கவனம் தேவை என்று உயர்நீதிமன்றம் முன்பு கூறியிருந்தது. பொதுவான இணையதளங்களிலும், இளம் வயதினர் அதிகம் பயன்படுத்தும் சமூக ஊடகத் தளங்களிலும் கொச்சையான மொழியைப் பயன்படுத்துவது குறித்து நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
போலி செய்திகளைத் தடுக்க தனிப் பிரிவு! பச்சைக் கொடி காட்டிய கர்நாடக முதல்வர் சித்தராமையா!
இந்த நீதிமன்றத்தின் கவலைகளை கவனத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அமைச்சகம் தனது கொள்கைகளை வகுக்கும்போது, சமூக ஊடகத் தளங்கள், ஸ்ட்டீரிங் தளங்கள் போன்றவற்றில் அவதூறு, கெட்ட வார்த்தைகள் உள்ளிட்ட சொற்கள் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அது குறித்த விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா ஆகஸ்ட் 17 அன்று ஒரு உத்தரவில் கூறினார்.
அமைச்சகம் சமர்ப்பிப்பித்த பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்ட கருத்துகளை ஏற்ற உயர் நீதிமன்றம், அரசு நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு போதுமான அளவுக்கு இணக்கமாக இருக்கிறது என்று கூறி வழக்கை முடித்து வைத்துள்ளது.
'கல்லூரி ரொமான்ஸ்' என்ற வலைத் தொடரில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் குறித்து கடுமையாகக் கண்டித்த நீதிமன்றம், ஆபாசமான தகாத வார்த்தை பயன்படுத்துவது பெண்களை இழிவுபடுத்துகிறது என்றும் அந்தக் காட்சிகளைப் பார்க்கும் பெண்கள் பாதிக்கப்படலாம் என நீதிமன்றம் கூறியது.
தொடரின் இயக்குனர் சிமர்பிரீத் சிங் மற்றும் நடிகர் அபூர்வா அரோரா ஆகியோர் மீது டெல்லி காவல்துறை தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யும்படி கூறிய மாஜிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவை உயர் நீதிமன்றம் மார்ச் 6ஆம் தேதி உறுதி செய்தது.