வாட்ஸ்அப் வலையில் சிக்கி ரூ.42 லட்சம் பணத்தை இழந்த ஐ.டி. ஊழியர்
வாட்ஸ்அப்பில் வந்த பகுதிநேர வேலைவாய்ப்பை நம்பிய ஐ.டி. ஊழியர் சுமார் 42 லட்சம் ரூபாயை இழந்துள்ளனர்.
குர்கானில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் சாப்ட்வேர் எஞ்ஜினியர் ஒருவர் வாட்ஸ்அப் மோசடியில் சிக்கி சுமார் ரூ.42 லட்சத்தை பறிகொடுத்து இருக்கிறார். அவரை ஏமாற்றியவர்கள் சில வீடியோக்களை லைக் செய்வதன் மூலம் கணிசமான வருவாய் ஈட்டலாம் என்று கூறி மோசடி செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சாப்ட்வேர் எஞ்சினியருக்கு மார்ச் 24 அன்று வாட்ஸ்அப்பில் ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில் யூடியூப்பில் குறிப்பிட்ட வீடியோக்களை லைக் செய்யும் பகுதிநேர வேலையில் ஈடுபடுவதன் மூலம் கூடுதல் வருமானம் ஈட்டலாம் என்று கூறப்பட்டிருந்தது. இதன் மூலம் விரைவாக அதிக பணம் கிடைக்கும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.
"நான் அவர்களுடன் பணிபுரிய ஒப்புக்கொண்டபோது, திவ்யா என்ற பெண் என்னை டெலிகிராம் செயலியில் ஒரு குழுவில் சேர்த்தார். அவர் உறுதியான சிறந்த வருமானம் கிடைக்கும் என்ற உத்தரவாதத்துடன் நான் பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என்றார். நான் என் வங்கிக் கணக்கில் இருந்தும் என் மனைவியின் வங்கிக் கணக்கில் இருந்தும் மொத்தம் ரூ.42,31,600 பணத்தை அவர்களுக்கு அனுப்பினேன்" என பாதிக்கப்பட்ட ஐ.டி. ஊழியர் சொல்கிறார்.
"திவ்யாவைத் தவிர, கமல், அங்கித், பூமி, ஹர்ஷ் ஆகியோரும் அனுப்பிய பணம் கிடைத்துவிட்டதை உறுதிப்படுத்தினர். உடனே நான் ரூ.69 லட்சம் லாபம் சம்பாதித்துள்ளதாகக் கூறினார்கள். ஆனால் நான் அந்தப் பணத்தை எடுக்க முயன்றபோது அவர்கள் என்னை அனுமதிக்கவில்லை. பின்னர் என்னிடம் மேலும் ரூ.11,000 அனுப்புமாறு கோரினர். அப்போதுதான் இது ஏமாற்று வேலையாக இருக்கலாம் எனத் தோன்றியது" என்றும் அவர் கூறுகிறார்.
செலுத்திய தொகையை திரும்பப் பெற முயற்சி செய்தபோது, மோசடிக்காரர்கள் அவரது பணத்தைக் கொடுக்க அணுக மறுத்துவிட்டனர். இது குறித்து இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் சைபர் கிரைம் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் ஆகியவற்றின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
அண்மையில், ஜீரோதா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் கோடீஸ்வரருமான நிதின் காமத் இதே போன்ற மோசடி குறித்து ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார். வாட்ஸ்அப்பில் வந்த பகுதிநேர வேலை வாய்ப்பை நம்பி ரூ.5 லட்சம் பணத்தை பறிகொடுத்த நண்பரின் கதையை அவர் விவரித்திருக்கிறார். "விரைவாக நிறைய பணம் சம்பாதிக்க எளிதான வழி எதுவுமில்லை" என்பதுதான் இந்தச் சம்பவத்தில் இருந்து கற்றுக்கொண்ட பாடம் எனவும் நிதின் காமத் கூறியுள்ளார்.