ஆண்டுக்கு 2 லட்சம் யூனிட்கள்... சைலண்ட் மோடில் சூப்பர் பிளான்... மாஸ் காட்டும் டாடா மோட்டார்ஸ்..!
டிகோர் EV மற்றும் நெக்சான் EV என இரண்டு மாடல்களை கொண்டு எலெக்ட்ரிக் வாகன சந்தையில் டாடா மோட்டார்ஸ் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஃபோர்டு உற்பத்தி ஆலையை வாங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தது. மேலும் இந்த விவகாரத்தில் இரு நிறுவனங்கள் இடையே இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது. விற்பனை விவகாரத்தில் குஜராத் அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டால், இரு நிறுவனங்களும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஃபோர்டு சனந்த் ஆலையில், ஒவ்வொரு ஆண்டும் இரண்டு லட்சம் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து இருப்பதாக கூறப்படுகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கூடுதலாக ரூ. 2 ஆயிரம் கோடி முதலீடு செய்து 2026 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு லட்சம் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
பெரும் முதலீடு:
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஃபோர்டு ஆலையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் யாரும் பணி நீக்கம் செய்யப்பட மாட்டார்கள் என குஜராத் அரசிடம் உறுதி அளித்து இருக்கிறது. இதன் மூலம் சுமார் 23 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். குஜராத் மாநிலத்தின் சனந்த் நகரில் உற்பத்தியை துவங்கிய முதல் நிறுவனங்களில் டாடா மோட்டார்ஸ் ஒன்றாக இருந்தது. நானோ காரை உற்பத்தி செய்ய ரூ. 4 ஆயிரத்து 500 கோடி முதலீடு செய்து இருந்தது. தற்போது இந்த ஆலையில் டியாகோ, டிகோர் மற்றும் டிகோர் EV போன்ற மாடல்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
ஆதிக்கம்:
இந்த ஆலையில் ஒவ்வொரு ஆண்டும் 1.5 லட்சம் யூனிட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. சனந்த ஆலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது. ஃபோர்டு நிறுவனத்தின் சனந்த் ஆலையில் முதலீடு செய்வதன் மூலம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் ஆதிக்கம் செலுத்த முயற்சித்து வருகிறது.
முன்னணி உற்பத்தியாளர்:
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நாட்டின் முன்னணி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளராக இருந்து வருகிறது. டிகோர் EV மற்றும் நெக்சான் EV என இரண்டு மாடல்களை கொண்டு எலெக்ட்ரிக் வாகன சந்தையில் டாடா மோட்டார்ஸ் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2 ஆயிரத்து 264 எலெக்ட்ரிக் வாகன யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது.