இனி ரூ.10,000க்கு மேல் இருக்கும் ஸ்மார்ட்போன்களில் கண்டிப்பாக 5ஜி இருக்கனும்.. மத்திய அரசு அட்வைஸ்
இந்தியாவில் 5ஜி சேவை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இனி 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படும் எல்லா ஸ்மார்ட்போன்களிலும் 5ஜி இருக்க வேண்டும் என்று மத்திய தொலைத்தொடர்புத்துறை அறிவுறுத்தியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
இந்தியாவில் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 5G சேவை தொடங்கியுள்ளது, அதன் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சியில், அனைத்து ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தங்கள் 5G ஸ்மார்ட்போனில் 5G சேவை கிடைத்திட தேவையான தொழில்நுட்ப நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தங்கள் 5ஜி ஸ்மார்ட்போன்களில் மூன்று மாத காலத்திற்குள்ளாக 5ஜியை இயக்கச் செய்ய முனைப்பு காட்டி வருகிறது. மேலும், இனி படிப்படியாக ரூ.10,000 அல்லது அதற்கு மேற்பட்ட விலையுள்ள போன்களை 5G ஸ்மார்ட்போன்களாக மாற்றப்போவதாக ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் அரசிடம் உறுதியளித்துள்ளனர்.
இதுகுறித்து ANI செய்திநிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியின்படி, மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை மற்றும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தைச் (MeitY) சார்ந்த உயர் அதிகாரிகளை ஸ்மார்ட்போன் நிறுவனங்கள், டெலிகாம் ஆபரேட்டர்களின் பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர். அப்போது 5G அமல்படுத்துவதற்கான முறைகளைப் குறித்து ஆலோசித்துள்ளனர்.
ஒரு மணி நேரம் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ரூ.10,000க்கு மேல் உள்ள 3ஜி-4ஜி ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்வதை நிறுத்திவிட்டு, படிப்படியாக 5ஜி தொழில்நுட்பத்திற்கு மாறுமாறு ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் கிட்டத்தட்ட 750 மில்லியன் மொபைல் போன் சந்தாதாரர்கள் இருப்பதாகவும், அவர்களில் 100 மில்லியன் பயனர்கள் 5G ஸ்மார்ட்போன்களை வைத்திருப்பதாகவும், 350 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் 3G அல்லது 4G போன்களை வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
100 மில்லியனுக்கும் அதிகமான 5G ஸ்மார்ட்போன்கள் சந்தாதாரர்கள் இருந்தபோதிலும், ஆப்பிள் உட்பட பல சாதனங்கள் 5ஜி நெட்வொர்க்கை செயல்படுத்தவில்லை என்றும் தொலைத்தொடர்பு துறை தெரிவித்துள்ளது.
Jio ரீசார்ஜ் ஆஃபரில் இருந்து Hotstar நீக்கம்! பயனர்கள் அதிர்ச்சி!!
5ஜி ஸ்மார்ட்போன்களில் 5ஜி சேவையை இயக்குவதற்கு ஆப்பிள், சாம்சங் உள்ளிட்ட ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தீவிர முயற்சி சோதனையில் இறங்கியுள்ளன. இதனை மேற்கோள் காட்டிய அரசு, 5G ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைப் புரிந்துகொள்ள தற்போது நடந்து வரும் சோதனை தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உதவும் என்று தெரிவித்துள்ளது..
ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகியவை இந்தியாவின் முதல் 5ஜி சேவை வழங்குநர்கள். ஏர்டெல் தனது ஸ்டாண்டலோன் 5ஜி பிளஸ் சேவையை எட்டு நகரங்களில் அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், ஜியோ தனது 5ஜி சோதனைகளை தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் நடத்தி வருகிறது. வோடபோன் 5G சேவை அமல்படுத்துவது குறித்து எந்த தேதியையும் வழங்கவில்லை என்றாலும், விரைவில் இந்த சேவையை தொடங்கும் என்று தெரிவித்துள்ளது.