நோக்கியாவுக்கே விபூதி- உங்க போன்ல இந்த சீன சிப்செட் இருக்க கூடாதுனு வேண்டிக்கோங்க..!
பட்ஜெட் ரக ஆண்ட்ராய்டு போன்களில் வழங்கப்பட்டு இருக்கும் குறிப்பிட்ட சீன சிப்செட்டில் பாதுகாப்பு குறைபாடு கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் வழங்கப்பட்டு இருக்கும் பெருமளவு சுதந்திரம் காரணமாக, இதனை ஹேக்கர்கள் எப்போதும் ஆண்ட்ராய்டு ஓ.எஸ்.-ஐ குறிவைக்கின்றனர். ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் சோதனை செய்வது, புதுமைகளை புகுத்துவது உள்ளிட்டவைகளை எளிதில் மேற்கொள்ள முடியும். இதனாலேயே பல்வேறு நல்ல பலன்களுடன், தீமைகளும் சேர்ந்தே வருகிறது.
பல்வேறு ஆண்ட்ராய்டு டெவலப்பர்கள் மொபைல் போன்களை மேலும் பயனுள்ளதாக மாற்றும் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர். ஹேக்கர்களும் பயனர் விவரங்களை அபகரித்து பணம் கேட்பது, விவரங்களை சேகரித்து மிரட்டுவது என தீய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், உங்களின் டிஜிட்டல் வாழ்க்கைய கேள்விக்குறியாக்கும் பாதுகாப்பு குறைபாடு கொண்ட சிப்செட் ஆலையில் இருந்து நேரடியாக வெளியாவது யாருக்கும் பயன் தராது.
இதேபோன்ற எச்சரிக்கை தகவல் அடங்கிய செய்தி குறிப்பு ஒன்றை க்ரிப்டோவேர் எனும் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. கிளவுட் சார்ந்த மொபைல் செக்யூரிட்டி மற்றும் பிரைவசி சேவைகளை வழங்கி வரும் க்ரிப்டோவயர் நிறுவனம் யுனிசாக் (UNISOC) மொபைல் சிப்செட்கள் கொண்ட மொபைல் சாதனங்களில் செக்யூரிட்டி மற்றும் பிரைவசி குறைபாடால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. இந்த சிப்செட்டில் உள்ள குறைபாடை பயன்படுத்தி, ஹேக்கர்களால் பயனர் தகவல்கள் மற்றும் சாதனத்தை இயக்க முடியும்.
இந்த குறைபாடு யுனிசாக் SCF9863A சிப்செட் கொண்டிருக்கும் மொபைல் போன்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளன. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களில் கூட யுனிசாக் SC9863A சிப்செட் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
க்ரிப்டோவயர் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி, இந்த குறைபாடு பயனர்களின் கால் மற்றும் சிஸ்டம் ரெக்கார்டுகள், குறுந்தகவல்கள், காண்டாக்ட் மற்றும் இதர தனிப்பட்ட விவரங்கள், சாதனத்தின் ஸ்கிரீனினை வீடியோ ரெக்கார்டு செய்வது, வெளிப்புற கேமரா கொண்டு வீடியோ எடுப்பது, ரிமோட் முறையில் வேறு ஒரு இடத்தில் இருந்தபடி சாதனத்தை இயக்குவது, தகவல்களில் மாற்றம் செய்வது அல்லது அழிப்பது என எதை வேண்டுமானாலும் செய்ய முடியும்.
இந்த குறைபாடு பற்றிய தகவலை க்ரிப்டோவயர் சிப்செட் உற்பத்தியாளர், சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், டெலிகாம் நிறுவனங்களுக்கு டிசம்பர் 2021 மாதத்திலேயே தெரிவித்து இருக்கிறது. இந்த குறைபாடை சரி செய்வது பற்றி சம்பந்தப்பட்ட நிறுவனம் நல்ல முடிவை விரைவில் எடுக்கும் என எதிர்பார்க்கலாம்.