Rolls Royce: உலகின் அதிவேகமான எலெக்ட்ரிக் விமானத்தை தயாரித்து மாஸ் காட்டிய ரோல்ஸ் ராய்ஸ்
ரோல்ஸ் ராய்ஸ் தயாரித்துள்ள விமானம் முழுக்க முழுக்க மின்சாரத்திலேயே இயங்கும் திறன் கொண்டது. இதனால், பெருமளவு கார்பன் வெளியேற்றம் குறைக்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.
ரோல்ஸ் ராய்ஸ் என்ற பெயரைக் கேட்டாலே பலருக்கும் பிரம்மாண்ட ஆடம்பர கார் தான் ஞாபகத்துக்கு வரும். ஆடம்பர கார் தயாரிப்புக்கு பெயர்போன ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தற்போது விமானங்களை தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறது.
குறிப்பாக சுற்றுச்சூழலுக்கு எந்தவித கேடும் விளைவிக்காத வகையில் மின்சாரத்தின் உதவியுடன் இயங்கக்கூடிய விமானத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வந்தது.
தற்போது அந்நிறுவனம் மணிக்கு அதிவேகமான எலக்ட்ரிக் விமானத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. இந்த விமானம் 623 கி.மீ. வேகத்தில் பறக்கக்கூடியதாம்.
2017ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சீமென்ஸ் எலெக்ட்ரிக் விமானம் மணிக்கு 213.04 கிமீ வேகத்தில் பறந்ததே முந்தைய சாதனையான இருந்த நிலையில், தற்போது ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் விமானம் அந்த சாதனையை முறியடித்துள்ளது.
இந்த விமானம் முழுக்க முழுக்க மின்சாரத்திலேயே இயங்கும் திறன் கொண்டது. இதனால், பெருமளவு கார்பன் வெளியேற்றம் குறைக்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த விமானத்தை தயாரிக்க பிரிட்டன் அரசின் எரிசக்தி துறை நிதியுதவி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த விமானத்தில் அதிநவீன பேட்டரி பயன்படுத்தப்பட்டு உள்ளதாம். சுமார் 7,500 போன்களுக்கு சார்ஜ் செய்து கொள்ளும் அளவுக்கு அதில் மின்சாரம் இருக்குமாம்.