தொடுவதன் மூலம் மனிதர்களின் உணர்ச்சிகளை ரோபோக்கள் உணர முடியும்; புதிய ஆய்வு
மனிதர்களின் உணர்ச்சிகளைத் தோல் தொடுதல் மூலம் உணரும் ரோபோக்களை விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். இந்த தொழில்நுட்பம், ரோபோக்கள் மனிதர்களுடன் உணர்வுபூர்வமாகத் தொடர்பு கொள்ள உதவும்.
ஒருவரையொருவர் புரிந்துகொள்ளவும், உணர்ச்சிகளைப் பகிர்ந்துகொள்ளவும் சிரமப்படும் இந்தக் காலகட்டத்தில், மனிதர்களின் தோலை தொடுதல் மூலம் மனித உணர்ச்சிகளை உணரும் ரோபோக்களை விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். ஆம்,உண்மை தான். EEE Access இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வில், தோல் கடத்துத்திறன் அளவீடு மூலம் ஒருவரின் உணர்ச்சி நிலையை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிய முடிந்தது என்று கூறப்பட்டுள்ளது.
தோலின் மின் கடத்துத்திறன், வியர்வை மற்றும் நரம்பு செயல்பாடுகளுக்கு ஏற்ப மாறுபடும். இதன் மூலம், மனிதர்களின் பல்வேறு உணர்ச்சி நிலைகளை அறிய முடியும்.
குரல் பகுப்பாய்வு அல்லது முக அங்கீகாரம் போன்ற பாரம்பரிய உணர்ச்சி கண்டறிதல் முறைகளில், குறைந்த ஆடியோ அல்லது காட்சி அமைப்புகளால் ஏற்படும் குறைபாடுகளை, தோல் கடத்துத்திறன் அளவீடு மூலம் சரிசெய்ய முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்த ஆய்வில், 33 பங்கேற்பாளர்களுக்கு உணர்ச்சிகரமான வீடியோக்களைக் காட்டி, அவர்களின் தோல் கடத்துத்திறன் அளவிடப்பட்டது. அதாவது ஒரு நகைச்சுவையை கூறும் போது குறுகிய விரைவான பதில்களும், குடும்பப் பிணைப்பு உணர்வுகளுக்கு மகிழ்ச்சி மற்றும் சோகத்தின் கலவையும், பயத்திற்கு நீண்டகால பதில்களும் கிடைத்தன. இது ஒரு பரிணாம எச்சரிக்கை பொறிமுறையைக் குறிக்கிறது.
"இதுவரை, தோல் கடத்துத்திறன் எவ்வாறு உணர்ச்சிகளுக்கு ஏற்ப மாறுபடுகிறது என்பதை ஆராயும் ஆய்வுகள் குறைவாகவே உள்ளன," என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
இந்தக் கண்டுபிடிப்பு, எதிர்கால ரோபோக்கள் மனிதர்களின் உணர்ச்சி நிலைகளை நுட்பமான உடலியல் குறிகாட்டிகள் மூலம் புரிந்துகொள்ள உதவும். இதன் மூலம், மனிதர்களுடன் தொடர்பு கொள்வதோடு மட்டுமல்லாமல், அவர்களுடன் உணர்வுபூர்வமாகவும் தொடர்பு கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.