ரூ.40,000க்குள் களமிறங்கும் ஐபோன் SE 4 மாடல்; எப்போது? என்னென்ன சிறப்பம்சங்கள்?
ஆப்பிள் நிறுவனம் 2025ம் ஆண்டு ஐபோன் SE 4 மாடலை அறிமுகம் செய்யும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த போனில் என்னென்ன சிறப்பம்சங்கள் இடம்பெற வாய்ப்புள்ளது? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஐபோன் SE 4
ஐபோன் SE 4 ஒரு பெரிய வடிவமைப்பு மாற்றத்தைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டச் ஐடிக்கு பதிலாக ஃபேஸ் ஐடி இருக்கும் என்றும் ஆல்-டிஸ்ப்ளே வடிவமைப்பு ஆப்பிளின் மற்ற பிரீமியம் ஐபோன்களை போலவே இருக்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது. OLED டிஸ்பிளே 6.1 இன்ச் என்ற அளவில் தற்போதைய ஐபோன் SE மாடலை விட மிகப் பெரியதாக இருக்கும் என தகவல்கள் கசிந்துள்ளன.
ஆப்பிள் நிறுவனத்தின் சொந்த ஏஐ (AI) அம்சமான ஆப்பிள் இன்டலிஜென்ஸ் (Apple Intelligence) வசதி ஐபோன் SE 4 மாடலில் இடம்பெறுகிறது.
மேலும் இந்த மாடல் ஐபோன் 14 மாடலில் காணப்படும் இரட்டை பின்புற கேமராக்களுக்குப் பதிலாக ஒற்றை பின்புற லென்ஸைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடலில் ஐபோன் 14 இல் காணப்படும் 12MP பிரதான கேமராவை விட அதிக மெகாபிக்சல் கொண்ட சென்சார்கள் இருக்கலாம் எனவும் தகவல்கள் கூறுகின்றன. ஐபோன் 14 போன்ற மின்னல் போர்ட் ஐபோன் ஸே 4 மாடலில் இடம்பெறாது, ஏனெனில் ஆப்பிள் அதை USB-C போர்ட்டுடன் மாற்ற திட்டமிட்டுள்ளது.
டிஸ்பிளே, கேமரா என்ன?
அனைத்து ஐபோன் 16 மாடல்களிலும் ஆக்ஷன் பட்டன் இருக்கும் நிலையில், ஐபோன் SE 4 இல் மியூட் சுவிட்ச் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தைவானிய பத்திரிகையான DigiTimes, ஆப்பிள் ஏற்கனவே சீனாவிலிருந்து ஐபோன் SE 4 க்கான OLED பேனல்களைப் பெறத் தொடங்கியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளதால் ஐபோன் SE 4 OLED டிஸ்பிளே கொண்டதாக இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது.
ஐபோன் SE 4 இல் ஒரே ஒரு பின்புற கேமரா மட்டும் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 48MP மெயின் கேமராவும், 12MP முன்பக்க கேமராவும் கொடுக்கப்படலாம் என தகவல்கள் உலா வருகின்றன. ஐபோன் SE 4மாடலில் 8GB RAMகொடுக்கப்படலாம் எனவும் சிப்செட் தற்போதைய ஐபோன் 16 சீரிஸ் மாடலை போலவே சக்திவாய்ந்ததாக இருக்கும் என்றும் பல்வேறு அறிக்கைகள் கூறுகின்றன.
விலை எப்படி இருக்கும்?
பிரீமியம் அம்சங்கள் சேர்க்கப்பட்டாலும் ஐபோன் SE 4மாடலில் விலை பட்ஜெட் விலையில் அனைவரும் வாங்கும்படியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இந்த போனின் விலை சுமார் 429 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.37,000) இருக்கும் என தகவல்கள் கூறுகின்றன. 2025ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த மாடல் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.