சீனாவின் வுகான் நகரில் இருந்து தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது 200க்கும் மேற்பட்ட நாடுகளை பாடாய் படுத்தி வருகிறது. இதனிடையே கொரோனா வைரஸ் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்றும், வேண்டுமென்றே அந்த வைரஸ் தொடர்பாக அடுத்தடுத்து தவறான தகவல்களை சீனா கொடுத்து வந்ததாகவும் அமெரிக்கா பரபரப்பு புகார்களை முன்வைத்தது. இதனால் உலக நாடுகளின் மத்தியில் சீனா எதிர்ப்பை சம்பாதித்து வருகிறது. 

இந்நிலையில் இந்தியா - சீனா இடையே போர் பதற்றம் எழுந்துள்ளது. எல்லையில் இரு நாட்டு படைகளும் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் நிலவுகிறது. இதனால் சீனாவின் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், உள்நாட்டு உற்பத்திக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்துவருகின்றன. அதன்படி ஜெய்ப்பூரில் உள்ள இந்திய நிறுவனம் வடிவமைத்த REMOVE CHINA APP என்ற செயலிக்கு இந்தியாவில் ஏகபோக வரவேற்பு கிடைத்தது. 

ஸ்மார்ட் போன்களில் உள்ள சீன செயலிகளை தேடி கண்டுபிடித்து நம்மிடம் காட்டும், அதன் பின்னர் அந்த செயலியை டெலிட் செய்யவும் முடியும். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக கிடைத்த இந்த செயலியை இரண்டே வாரத்தில் மட்டும் 10 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் டவுன்லோடு செய்துள்ளனர். டிக்-டாக் உள்ளிட்ட சீன செயலிகளை இந்த ஆப் டெலிட் செய்து வந்த நிலையில் கூகுள் ப்ளே ஸ்டோரில் REMOVE CHINA APP நீக்கப்பட்டுள்ளது, இந்தியர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. 

இதையும் படிங்க: என்னாது நிர்வாண யோகாவா?.... ஊரடங்கில் எல்லை மீறி ஆட்டம் போடும் இளம் நடிகை...!

கூகுள் விதிகளின் படி மூன்றாம் தர செயலிகளை நீக்கும் படி பயனாளர்களை தூண்ட செயலிக்கு அதிகாரம் கிடையாது. அதனால் தான் இந்த செயலி ப்ளே ஸ்டோரில் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக டிக்-டாக்கிற்கு போட்டியாக இந்தியாவில் உருவாக்கப்பட்ட மித்ரோன் செயலி கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.