ஜியோ 5ஜி சேவை மேலும் 34 நகரங்களில் விரிவாக்கம்!
இந்தியாவில் ஜியோ 5ஜி சேவை 34 நகரங்களில் கூடுதலாக விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் 5ஜி சேவை உள்ள நகரங்களின் மொத்த எண்ணிக்கை 225 ஆக அதிகரித்துள்ளது.
ஜியோ நிறுவனம் தற்போது முழு வீச்சில் 5ஜி சேவைகளை விரிவுபடுத்தி வருகிறது. தினமும் ஏதாவது ஒரு மாநிலத்தில் 5ஜி விரிவாக்கம் அமல்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், ரிலையன்ஸ் ஜியோ செவ்வாயன்று 13 மாநிலங்களில் உள்ள 34 நகரங்களில் 5G சேவைகளை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது, இதனால் தற்போது ஜியோ நிறுவனத்தின் True 5G சேவைகளை பெறும் மொத்த நகரங்களின் எண்ணிக்கை 225 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு வடகிழக்கு மாநிலங்களான ஷில்லாங், இம்பால், ஐஸ்வால், அகர்தலா, இட்டாநகர், கோஹிமா மற்றும் திமாபூர் ஆகிய ஆறு மாநிலங்களில் 5ஜி சேவை கொண்டு வரப்பட்டது. அதன்பிறகு, தற்போது 34 நகரங்களில் விரிவுபடுத்தப்பட்டு உள்ளன.
அதன்படி, ஆந்திராவில் ஆறு நகரங்கள் (அனந்தபுரமு, பீமாவரம், சிராலா, குண்டக்கல், நந்தியால், தெனாலி), அசாமில் மூன்று (திப்ருகார், ஜோர்ஹாட், தேஜ்பூர்), பீகாரில் ஒன்று (கயா), சத்தீஸ்கரில் இரண்டு (அம்பிகாபூர், தம்தாரி), ஹரியானாவில் இரண்டு ( தானேசர், யமுனாநகர்), கர்நாடகாவில் ஒன்று (சித்ரதுர்கா), மகாராஷ்டிராவில் இரண்டு (ஜல்கான், லத்தூர்), ஒடிசாவில் இரண்டு (பாலங்கிர், நால்கோ), பஞ்சாபில் இரண்டு (ஜலந்தர், பக்வாரா), ராஜஸ்தானில் ஒன்று (அஜ்மீர்)
மேலும், தெலுங்கானாவின் அடிலாபாத், மகபூப்நகர், ராமகுண்டம் ஆகிய நகரங்களும் 5ஜி சேவையைப் பெறும். உத்தரபிரதேசத்தின் மதுராவிலும் 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டன. பீட்டா சோதனை தொடங்கிய வெறும் நான்கு மாதத்திற்குள்ளாக ஜியோ நிறுவனம் இந்த அளவுக்கு 5ஜியை விரிவுபடுத்திவிட்டது.
இது தொடர்பாக ஜியோ தரப்பில் கூறுகையில், "ஜியோ ட்ரூ 5ஜி சேவைகளை 34 கூடுதல் நகரங்களில் அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். தற்போது மொத்த எண்ணிக்கையை 225 நகரங்களாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. பீட்டா சோதனை தொடங்கப்பட்டதிலிருந்து 120 நாட்களுக்குள் ஜியோ இந்த மைல்கல்லை எட்டியுள்ளது. ஒட்டுமொத்த நாட்டையும் இணைக்கும் பாதையில் உள்ளது. 2023 டிசம்பரில் ஜியோ ட்ரூ 5ஜி சேவைகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த அளவிலான 5G நெட்வொர்க் அறிமுகம் என்பது உலகில் முதல் முறையாகும். 2023 இந்தியாவிற்கு ஒரு முக்கிய ஆண்டாக இருக்கும். ஜியோவின் ட்ரூ 5G தொழில்நுட்பத்தின் பலன்களை விரைவில் முழு நாடும் அறுவடை செய்யும்’ என்று ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.