Redmi K50: ரூ. 25 ஆயிரத்திற்கு சியோமி ஃபிளாக்ஷிப் போன்கள் - விரைவில் வெளியீடு?
ரெட்மி K50 ஸ்மார்ட்போனின் இந்திய அம்சங்கள் மற்றும் விலை விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி K50 ஸ்மார்ட்போன் விவரங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய ரெட்மி K50 முக்கிய அம்சங்கள், டிசைன் ரெண்டர்கள் மற்றும் விலை உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளது. புதிய ரெட்மி ஃபிளாக்ஷிப் சீரிசில் - வெண்ணிலா ரெட்மி K50, ரெட்மி K50 ப்ரோ, ரெட்மி K50 ப்ரோ பிளஸ் மற்றும் ரெட்மி K50 கேமிங் எடிஷன் உள்ளிட்ட மாடல்கள் இடம்பெற்றுள்ளன.
கேமிங் எடிஷன் மாடல் கடந்த மாதம் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. வெண்ணிலா ரெட்மி K50 மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர், அதிகபட்சம் 8GB ரேம் வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் 64GB அல்லது 128GB மெமரி வழங்கப்படும் என தெரிகிறது. ரெட்மி K சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் 6.6 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படலாம்.
புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, 8MP இரண்டாவது கேமரா, 5MP டெரிடரி சென்சார் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த MIUI ஸ்கின் கொண்டிருக்கும். இத்துடன் 5000mAh பேட்டரி, 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
விலை விவரங்கள்
ரெட்மி K50 விலை ரூ. 25 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 30 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். இந்த ஸ்மார்ட்போன் மார்ச் மாத இறுதியிலோ அல்லது ஏப்ரல் மமாத துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படலாம். இந்த ஸ்மார்ட்போன் மொத்தம் மூன்று நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது.