Rage Bait ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் 2025-ம் ஆண்டின் சிறந்த வார்த்தையாக 'Rage Bait'-ஐ அறிவித்துள்ளது. இணையத்தில் உங்களை கோபப்படுத்தி லைக்ஸ் வாங்கும் இந்த உத்தி பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ளுங்கள்.

சமூக வலைதளங்களில் நாம் மணிக்கணக்கில் நேரத்தைச் செலவிடுகிறோம். சில பதிவுகள் நமக்கு மகிழ்ச்சியைத் தரும், சில பதிவுகள் சிரிப்பை வரவழைக்கும். ஆனால், சில பதிவுகளைப் பார்த்தால் நமக்குத் தலைக்கேறுகின்ற அளவுக்குக் கோபம் வரும். "எதுக்குடா இப்படியெல்லாம் போஸ்ட் போடுறாங்க?" என்று திட்டிவிட்டு, அந்தப் பதிவின் கீழே காரசாரமாக கமெண்ட் செய்வோம். இப்படி உங்களை வேண்டுமென்றே கோபப்படுத்தி, கமெண்ட் போட வைக்கும் உத்திக்கு பெயர்தான் 'Rage Bait'.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பதிப்பகம் (Oxford University Press), 2025-ம் ஆண்டிற்கான சிறந்த வார்த்தையாக (Word of the Year) இந்த 'Rage Bait' என்ற வார்த்தையைத் தேர்ந்தெடுத்துள்ளது.

'Rage Bait' என்றால் என்ன?

'Rage' என்றால் கடும் கோபம்; 'Bait' என்றால் தூண்டில் அல்லது இரை. அதாவது, இணையத்தில் பார்வையாளர்களின் கோபத்தைத் தூண்டிவிட்டு, அதன் மூலம் அதிக லைக்ஸ், கமெண்ட்ஸ் மற்றும் ஷேர்களைப் பெறுவதற்காகச் செய்யப்படும் தந்திரமே 'Rage Bait'.

ஒருவர் வேண்டுமென்றே தவறான கருத்தைச் சொல்வது, சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது அல்லது எரிச்சலூட்டும் வகையில் சமையல் செய்வது போன்ற வீடியோக்களை வெளியிடுவார்கள். இதைப் பார்க்கும் நமக்குக் கோபம் வந்து, உடனே கமெண்டில் அவர்களைத் திட்டுவோம். ஆனால், நாம் திட்டுவது அவர்களுக்கு லாபம். ஏனெனில், 'நெகட்டிவ் கமெண்ட்' வந்தாலும், சமூக வலைதள அல்காரிதம் (Algorithm) அதை 'Engagement' ஆகக் கணக்கிட்டு, அந்த வீடியோவை மேலும் பலருக்குக் கொண்டு சேர்க்கும்.

ஏன் இந்த வார்த்தை தேர்ந்தெடுக்கப்பட்டது?

2025-ம் ஆண்டில் இணைய பயன்பாட்டில் இந்த வார்த்தை அதிக ஆதிக்கம் செலுத்தியுள்ளது. "அழகான பூனைக்குட்டிகளின் வீடியோக்களை விட, நம்மை எரிச்சலூட்டும் வீடியோக்களுக்கே நாம் அதிக எதிர்வினையாற்றுகிறோம். இதைப்பயன்படுத்தி பலர் பிரபலமாக நினைக்கிறார்கள்," என்று ஆக்ஸ்போர்டு அகராதி தொகுப்பாளர் சூசி டென்ட் (Susie Dent) கூறுகிறார். இணைய உலகின் தற்போதைய மனநிலையை (Zeitgeist) இந்த வார்த்தை சரியாகப் பிரதிபலிப்பதால் இது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

மற்ற போட்டியாளர்கள் யார்?

'Rage Bait' முதலிடத்தைப் பிடித்தாலும், இன்னும் இரண்டு வார்த்தைகள் கடும் போட்டியை அளித்தன:

1. Aura farming (ஆரா ஃபார்மிங்): தன்னைச் சுற்றி ஒரு விதமான ஈர்ப்பை அல்லது மர்மத்தை உருவாக்குவது போல காட்டிக்கொள்வது. மற்றவர்களைக் கவரும் வகையில் தனது தோற்றத்தையும் நடவடிக்கையையும் அமைத்துக்கொள்வது.

2. Biohack (பயோ ஹேக்): தனது உடல் மற்றும் மனதின் செயல்திறனை அதிகரிக்கவும், ஆயுளை நீட்டிக்கவும் உணவு அல்லது வாழ்க்கை முறையில் அறிவியல் ரீதியான மாற்றங்களைச் செய்வது.

பொதுமக்களின் வாக்கெடுப்பு மற்றும் மொழியியல் வல்லுநர்களின் ஆய்வுக்குப் பிறகு, 'Rage Bait' வெற்றியாளராக அறிவிக்கப்பட்டது. கடந்த 2022-ம் ஆண்டில் 'Goblin Mode' என்ற வார்த்தை தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.