Microsoft Quantum Computer: என்விடியா (Nvidia) சி.இ.ஓ.வின் கணிப்புக்கு மாறாக, மைக்ரோசாஃப்ட்டின் புதிய Majorana 1 சிப், குவாண்டம் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பம் இன்னும் சில வருடங்களில் சாத்தியமாகும் என்பதை உணர்த்துகிறது. மைக்ரோசாஃப்ட், கூகுள், ஐபிஎம் நிறுவனங்கள் இதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

மைக்ரோசாஃப்ட்டின் புதிய மஜோரானா 1 (Majorana 1 சிப்) வெளியானதைத் தொடர்ந்து, குவாண்டம் கம்ப்யூட்டிங் தொடர்பான விவாதம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. இதன் விளைவாக பிப்ரவரி 20 அன்று தொழில்நுட்ப பங்குகள் உயர்ந்தன. இன்னும் 20 ஆண்டுகளில் உண்மையான குவாண்டம் கம்ப்யூட்டர்களைத் தயாரிக்க முடியும் என என்விடியா (Nvidia) நிறுவனத்தின் சி.இ.ஓ. ஜென்சன் ஹுவாங் கூறியிருந்தார்.

அதற்கு மாறாக, இந்த சிப் குவாண்டம் கம்ப்யூட்டர்களை இன்னும் சில வருடங்களில் சாத்தியப்படுத்தும் என்று மைக்ரோசாஃப்ட் நம்புகிறது. இந்த அறிவிப்பின் மூலம், குவாண்டம் கம்ப்யூட்டிங் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று மைக்டோரசாஃப்ட் எதிர்பார்க்கிறது. மைக்ரோசாஃப்ட் தவிர, கூகுள், ஐ.பி.எம். நிறுவனங்களும் குவாண்டம் கம்ப்யூட்டர்களை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று கணித்துள்ளன.

இருபது ஆண்டுகளாக வளர்ச்சிக் கட்டத்தில் இருந்த Majorana 1 சிப், 1930களில் கண்டுபிடிக்கப்பட்ட Majorana fermion என்ற அணுத்துகள்களைப் பயன்படுத்துகிறது. இதன் சிறப்பான பண்புகள் காரணமாக, இந்தத் துகள் தற்போதுள்ள குவாண்டம் கம்ப்யூட்டர்களில் ஏற்படும் தவறுகளைக் குறைக்க உதவுகிறது. இது தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு பெரிய திருப்புமுனையாக அமையும் எனக் கூறப்படுகிறது.

Scroll to load tweet…

குவாண்டம் கம்ப்யூட்டர்கள் தற்போதுள்ள சூப்பர் கம்ப்யூட்டர்களால் கூட செய்ய முடியாத கணக்கீடுகளையும் சுலபமாகச் செய்து முடிக்கும். இதனால், குவாண்டம் கம்ப்யூட்டிங் கணக்கீட்டு முறையையே முழுமையாக மாற்றியமைக்கும் திறனைக் கொண்டுள்ளது. இது என்க்ரிப்ஷன் முறைகளை உடைக்கும் திறனையும் கொண்டது. இதனால் சைபர் பாதுகாப்பு அபாயங்களுக்கான வாய்ப்புகளையும் உள்ளடக்கியது. க்யூபிட்களைக் (qubits) கட்டுப்படுத்துவது முக்கிய சவாலாக உள்ளது.

ஜென்சன் ஹுவாங் என்ன சொன்னார்?

இந்த ஆண்டு ஜனவரியில் நடந்த CES வர்த்தக கண்காட்சியில் என்விடியா (Nvidia) தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங், குவாண்டம் கம்ப்யூட்டர்கள் வர இன்னும் பல தசாப்தங்கள் ஆகும், சுமார் 15 முதல் 30 ஆண்டுகள் ஆகலாம் என்று கூறினார். குவாண்டம் கம்ப்யூட்டர்களுக்கு தற்போது உள்ளதை விட மில்லியன் மடங்கு குவாண்டம் ப்ராசஸிங் யூனிட்கள் தேவைப்படும் என்று அவர் தெரிவித்தார். அவரது இந்தப் பேச்சு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குவாண்டம் கம்ப்யூட்டிங் நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன.

ஐ.பி.எம். (IBM) 2033க்குள் பெரிய அளவிலான குவாண்டம் கம்ப்யூட்டர்கள் சாத்தியம் என்று கணித்திருக்கிறது. வணிக பயன்பாட்டிற்கான குவாண்டம் கம்ப்யூட்டர்கள் இன்னும் ஐந்து ஆண்டுகளில் வந்துவிடும் என்று கூகுள் (Google) கூறியுள்ளது. இப்போது, மைக்ரோசாஃப்ட்டின் புதிய தொழில்நுட்பமும் குவாண்டம் கம்ப்யூட்டிங் விரைவில் வரலாம் என்ற கருத்தை உறுதி செய்கிறது.