ஆக்சிஜன் ஓ.எஸ்.-கலர் ஓ.எஸ். இணைப்பு திட்டத்தை கைவிட்ட ஓன்பிளஸ்
ஒன்பிளஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்த ஆக்சிஜன் ஓ.எஸ். மற்றும் கலர் ஓ.எஸ். ஒருங்கிணைப்பு திட்டம் ரத்து செய்யப்பட்டது.
ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த ஆண்டு ஒப்போ உடன் இணைந்தது. இணைப்புக்கு பின் ஒப்போவுன் துணை பிராண்டாக ஒன்பிளஸ் மாறியது. இதைத் தொடர்ந்து ஆண்ட்ராய்டு தளத்தை சார்ந்த இரு நிறுவனங்களின் இயங்குதள கோட்பேஸ் ஒருங்கிணைக்கப்பட்டன. இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் இரு ஒ.எஸ்.களை இணைத்து புதிய ஓ.எஸ். அறிமுகம் செய்ய இருப்பதாகவும் ஒன்பிளஸ் அறிவித்தது.
இந்த அறிவிப்பு உலகளாவிய ஒன்பிளஸ் பயனர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை பெற்றது. இந்த நிலையில், ஓ.எஸ். இணைப்பு திட்டம் கைவிடப்பட்டதாக ஒன்பிளஸ் அறிவித்து இருக்கிறது. அந்த வகையில் இரு நிறுவன சாதனங்களிலும் முன்பை போன்றே வெவ்வேறு ஓ.எஸ். வழங்கப்பட இருக்கிறது.
இதுற்றிய அததிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்பிளஸ் கம்யூனிட்டி தளத்தில் இடம்பெற்று இருக்கிறது. மேலும் ஆக்சிஜன் ஓ.எஸ். மற்றும் கலர் ஓ.எஸ். தனித்தனியே செயல்படும் என ஒன்பிளஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட் லௌ தெரிவித்தார். கம்யூனிட்டி தளத்தில் பயனர்கள் வெளிப்படுத்திய கருத்துக்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என ஒன்பிளஸ் தெரிவித்து உள்ளது.
எனினும், இரு இயங்குதளங்களும் ஒருங்கிணைந்த கோட்பேஸ் பயன்படுத்துவதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதன்படி ஆக்சிஜன் ஓ.எஸ். ஸ்கின் அல்லது லேயர் கலர்ஓ.எஸ். மேல் செயல்படும். இதன் காரணமாக கடந்த சில மாதங்களில் இரு மென்பொருள்களிலும் சில அம்சங்கள் பகிர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. ஒருங்கிணைந்த கோட்பேஸ் பயன்படுத்துவதன் மூலம் அப்டேட்களை வேகமாக வழங்க முடியும்.