சீனாவின் ஒப்போ நிறுவனம், தனது புதிய ஃபிளாக்ஷிப் மாடலான Find X9 Ultra-வை ஏப்ரல் 21 அன்று உலகளவில் அறிமுகம் செய்ய உள்ளது.
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒப்போ, தனது புதிய ஃபிளாக்ஷிப் மாடலான Find X9 Ultra-வை வரும் ஏப்ரல் 21-ம் தேதி உலகளவில் அறிமுகம் செய்யப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. "உங்கள் அடுத்த கேமரா அறிமுகத்திற்குத் தயார்" (Your next camera is ready to launch) என்ற டேக்லைனுடன், கேமரா அம்சங்களை முன்னிலைப்படுத்தி இந்த போனை களமிறக்குகிறது ஒப்போ. இதன் மூலம், தரமான புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க விரும்பும் வாடிக்கையாளர்களை இந்நிறுவனம் குறிவைத்துள்ளது.
கேமரா தொழில்நுட்பம்
இந்த உலகளாவிய அறிமுக நிகழ்வோடு, சீனாவில் உள்ள செங்டு (Chengdu) நகரில் ஒரு சிறப்பு நிகழ்ச்சியையும் ஒப்போ ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் Find X9 Ultra உடன், Find X9S Pro என்ற மற்றொரு மாடலும் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு போன்களின் முக்கிய சிறப்பம்சமே, புகழ்பெற்ற Hasselblad நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட கேமரா தொழில்நுட்பம்தான். இந்த போன்களுக்கான ப்ரீ-ஆர்டர் சீனாவில் ஏற்கனவே தொடங்கிவிட்டது.
துல்லியமான படங்கள் எடுக்கலாம்
Find X9S Pro மாடலின் கேமரா குறித்த சில தகவல்கள் டீசர்கள் மூலம் வெளியாகியுள்ளன. இதில் 200 மெகாபிக்சல் பிரதான கேமரா மற்றும் 200 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் இடம்பெறும் எனத் தெரிகிறது. கூடவே, 50 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமராவும் இருக்கலாம். இந்த கேமரா அமைப்பு, தொலைவில் உள்ள பொருட்களைத் தெளிவாகப் படம் பிடிக்கவும், மிகத் துல்லியமான புகைப்படங்களை எடுக்கவும் உதவும்.
மற்ற சிறப்பம்சங்கள்
மற்ற அம்சங்களைப் பொறுத்தவரை, இதில் 6.32 இன்ச் OLED டிஸ்ப்ளே, மீடியாடெக் டைமன்சிட்டி 9500 பிராசஸர் மற்றும் சுமார் 7000mAh திறன் கொண்ட பேட்டரி ஆகியவை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 80 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங், அல்ட்ராசோனிக் ஃபிங்கர்பிரின்ட் ஸ்கேனர் மற்றும் IP68/IP69 தரத்திலான தண்ணீர்-தூசு புகாத பாதுகாப்பு போன்ற அம்சங்களும் இதில் இருக்க வாய்ப்புள்ளது. மெட்டல் பாடியுடன் கூடிய பிரீமியம் டிசைன் இந்த போனுக்கு கூடுதல் அழகைச் சேர்க்கும்.
கன்ட்ரோல் பட்டன்
இதேபோல் Find X9 Ultra மாடலில் 200 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 10x ஆப்டிகல் ஜூம் வசதியுடன் கூடிய 50 மெகாபிக்சல் செகண்டரி டெலிஃபோட்டோ கேமரா ஆகியவை இடம்பெறும் எனத் தெரிகிறது. 7000mAh-க்கும் அதிகமான பேட்டரி மற்றும் மேம்பட்ட கேமரா அமைப்பு ஆகியவை இதன் முக்கிய ஹைலைட்ஸாக இருக்கும். இதுதவிர, போனில் புதிதாக ஆரஞ்சு நிறத்தில் ஒரு கண்ட்ரோல் பட்டன் சேர்க்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அறிமுக தேதி நெருங்கும்போது, இந்த போன்கள் குறித்த மேலும் பல அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.


