1400 இ ஸ்கூட்டர்களை ரி-கால் செய்யும் ஓலா எலெக்ட்ரிக் - என்ன ஆச்சு தெரியுமா?
ஓலா எலெக்ட்ரிக் நிறுவன ஸ்கூட்டர் மாடல்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிகள், இந்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்த AIS 156 தரச் சான்றை பெற்றுள்ளன.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் 1441 எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களை ரி-கால் செய்வதாக அறிவித்து இருக்கிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் அடிக்கடி தீப்பிடித்து எரிவதை அடுத்து ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்த நடவடிக்கையை அதரடியாக எடுத்து உள்ளது.
மார்ச் 26 ஆம் தேதி பூனேவில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. முதற்கட்ட விசாரணையில் அந்த ஸ்கூட்டர் தனித்து விடப்பட்டு இருந்தது என ஓலா எலெக்ட்ரிக் தெரிவித்து உள்ளது.
"முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்கூட்டர்களின் மீது முழுமையான ஆய்வு மற்றும் அதன் பாகங்கள் எந்த நிலையில் இருக்கின்றன என்பதை சரிபார்க்க முடிவு செய்து இருக்கிறோம். இதன் காரணமாக 1441 வாகனங்களை ரி-கால் செய்கிறோம்," என ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
தரமுள்ள பேட்டரி:
"இந்த ஸ்கூட்டர்கள் எங்களின் சர்வீஸ் பொறியாளர்களால் ஆய்வு செய்யப்பட்டு, அனைத்து பேட்டரி சிஸ்டம்கள், தெர்மல் சிஸ்டம்கள் மற்றும் பாதுகாப்பு சிஸ்டம்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்துவர்." என்றும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்து உள்ளது. ஓலா எலெக்ட்ரிக் நிறுவன ஸ்கூட்டர் மாடல்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிகள், இந்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்த AIS 156 தரச் சான்றை பெற்றுள்ளன. மேலும் இவை ஐரோப்பிய தரத்தை உறுதிப்படுத்தும் வகையில் ECE 136 சான்றையும் பெற்றுள்ளன.
இந்தியாவில் சமீப காலமாக எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள், தங்களின் இ ஸ்கூட்டர்களை ரி-கால் செய்து வருகின்றன. இதேபோன்று ஒகினவா ஆட்டோடெக் நிறுவனம் 3 ஆயிரம் இ ஸ்கூட்டர்களை ரி-கால் செய்து அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.
அரசு கண்டனம்:
முன்னதாக எலெக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடிக்கும் சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்து மத்திய அமைச்சர் கடும் நடவடிக்கை எடுக்கும் என வலியுறுத்தி இருந்தது. "கடந்த இரு மாதங்களாக பல்வேறு எலெக்ட்ரிக் வாகன விபத்து சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்கள் தங்களின் செயல்பாடுகளில் அலட்சியம் காட்டினால் கடுமையான அபராதம் விதிப்பதோடு, நடவடிக்கையும் எடுக்கப்படு. பிரச்சினை ஏற்பட்டுள்ள வாகனங்கள் உடனடியாக ரீ-கால் செய்ய உத்தரவிடப்படும்," என நிதின் கட்கரி தெரிவித்து இருக்கிறார்.