5 நிமிடங்களில் முழு சார்ஜ் - இஸ்ரேல் நிறுவனத்துடன் கூட்டணி அமைக்கும் ஓலா எலெக்ட்ரிக்
ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை இந்தியாவில் கொண்டு வருவதற்கு ஏற்ற வகையில் பேட்டரிகளை உற்பத்தி செய்ய ஸ்டார்ட் அப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இஸ்ரேலை சேர்ந்த பேட்டரி தொழில்நுட்ப நிறுவனமான ஸ்டோர்டாட் உடன் கூட்டணை அமைப்பதாக அறிவித்து இருக்கிறது. ஸ்டோர்டாட் நிறுவனம் பேட்டரிகள் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பங்களில் முன்னோடியாக விளங்குகிறது. இரு நிறுவனங்கள் இடையேயான கூட்டணியின் கீழ், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் XFC பேட்டரி தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ளும்.
ஸ்டோர்டாட் நிறுவனத்தின் XFC பேட்டரி தொழில்நுட்பம் பேட்டரியை 0 முதல் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய வெறும் ஐந்து நிமிடங்களையே எடுத்துக் கொள்கிறது. ஸ்டோர்டாட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை இந்தியாவில் கொண்டு வருவதற்கு ஏற்ற வகையில் பேட்டரிகளை உற்பத்தி செய்ய இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
"ஃபியூச்சர் செல் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய இருக்கிறோம். இஸ்ரேலை சேர்ந்த ஸ்டோர்டாட் நிறுவனத்துடன் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறோம். சந்தையில் விரைந்து புது தொழில்நுட்பத்தை கொண்டு வர விரைவில் இணைந்து பணியாற்ற இருக்கிறோம். புதிய ஃபாஸ்ட் சார்ஜிங் செல் தொழில்நுட்பம் இந்தியாவில் பேட்டரிகளை 0 முதல் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய ஐந்து நிமிடங்களையே எடுத்துக் கொள்ளும்," என ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவஷ் அகர்வால் தெரிவித்தார்.
இந்த முதலீட்டின் மூலம் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது ஆய்வு மற்றும் வளர்ச்சி மைய பணிகளை விரைவுப்படுத்தவும் முடிவு செய்துள்ளது. இந்தியாவில் பேட்டரி செல்களை உற்பத்தி செய்ய ஜிகாஃபேக்டரியை திறக்க ஓலா எலெக்ட்ரிக் திட்டமிட்டுள்ளது. ஓலா S1 மற்றும் ஓலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களால் ஏற்பட்டு இருக்கும் தட்டுப்பாடை எதிர்கொள்ளவே இந்த ஜிகாஃபேக்டரி திறக்கப்படுகிறது.
ஸ்டோர்டாட் நிறுவனம் XFC தொழில்நுட்பத்தில் கைதேர்ந்து இருக்கிறது. இந்த தொழில்நுட்பம் பேட்டரிகளை ஐந்தே நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்து விடும். இந்த தொழில்நுட்பத்தின் உற்பத்தி பணிகள் அடுத்த சில ஆண்டுகளில் துவங்க இருக்கிறது. அடுத்த பத்து ஆண்டுகளில் இரண்டே நிமிடங்களில் சார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணிகளிலும் ஸ்டோர்டாட் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
"அதிவேக ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் பெயர் பெற்ற ஸ்டோர்டார் நிறுவனத்துடனான கூட்டணி அமைப்பது எங்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். இது எங்களின் பல்வேறு எதிர்கால திட்டங்களில் முதலாவது திட்டம் ஆகும்," என பாவிஷ் அகர்வால் தெரிவித்தார்.