IRCTC டுவிட்டர் தளத்தில் ‘ரயில் டிக்கெட் கிடைக்குமா’ என்று கேட்ட பெண்ணிடம் ரூ. 64,000 மோசடி!
ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் டிக்கெட் கிடைக்குமா என்று கேட்ட பெண்ணிடம் 64 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் ரயில் டிக்கெட் முன்பதிவு மற்றும் ரயில் சேவைகளை IRCTC நிறுவனம் அதிகாரப்பூர்வமாக நடத்தி வருகிறது. IRCTC சார்பில் டுவிட்டர் பக்கம், செயலி, இணையதளங்கள் உள்ளன. மேலும், வாடிக்கையாளர்கள் சேவை மற்றும் புகார் பிரிவும் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மும்பை நகரின் பார்லே பகுதியைச் சேர்ந்த மீனா என்ற பெண் வழக்கம் போல் ஐஆர்சிடிசி தளத்தில் ரயில் டிக்கெட் புக் செய்திருந்தார். டிக்கெட்டில் முன்பதிவு செய்யப்பட்ட மூன்று இருக்கைகளானது RCA என்ற நிலையில் இருந்தது. அதாவது ரயிலில் சீட்டில் உட்கார்ந்து கொண்டு பயணிக்கலாம், ஆனால் படுக்கை இன்னும் உறுதியாகவில்லை.
இதனால், படுக்கை கிடைக்குமா என்று மீனா தரப்பில் ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் முன்பதிவு நிலையைப் பற்றி விசாரித்தனர். 37 வயதான அந்த பெண், அவ்வாறு கேட்டதும் மட்டுமின்றி, தனது டிக்கெட் விவரங்கள், மொபைல் நம்பர் ஆகியவற்றையும் ட்வீட் செய்துள்ளார். பிறகு, சிறிது நேரம் கழித்து அவரது மொபைல் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. எதிர்முனையில் இருந்து பேசியவர் ஐஆர்சிடியின் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டார்.
பின்பு, எதிர்முனையில் இருப்பவர் ‘ரயில் டிக்கெட்டை உறுதி செய்ய உங்களுக்கு ஒரு லிங்க் அனுப்பப்படும், அதில் உங்கள் வங்கி விவரங்களை பூர்த்தி செய்து, வெறும் இரண்டு ரூபாய் பணம் செலுத்துமாறு கூறியுள்ளார். இதை நம்பி மீனாவும் அவரது மகனும் அது என்ன லிங்க் என்றே பார்க்காமல், உடனடியாக இரண்டு ரூபாய் அனுப்பியுள்ளனர். அவ்வளவு தான். அடுத்தடுத்த நிமிடங்களில் அந்த பெண்ணின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் கரையத் தாடங்கியது.
சற்று நேரத்தில், பெண்ணின் கணக்கில் இருந்து சுமார் ரூ.64,011 டெபிட் செய்யப்பட்டது. அதன் பிறகு தான் எதிர்முனையில் இருந்து அழைத்தவர் IRCTC வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி என்ற பெயரில் ஹேக்கர்கள் செயல்பட்டிருப்பது புரிந்தது. தங்களுக்கு வந்த அழைப்பின் எண்ணிற்கு மீண்டும் மீண்டும் கால் செய்து பார்த்தனர். ஆனால், அந்த எண் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.
முகப்புப் பயன்பாட்டில் முழு டிவி கட்டுப்பாடுகளை Google அறிமுகப்படுத்துகிறது: அனைத்து விவரங்களும்
இதனையடுத்து விலே பார்லே பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எங்கு, யார் கேட்டாலும் வங்கி விவரங்கள், ஓடிபி எண்களை பகிர வேண்டாம் என்று போலீசாரும், வங்கி தரப்பில் இருந்தும் அடிக்கடி வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், சிலர் விழிப்புணர்வு இல்லாமல், ஹேக்கர்களின் மிரட்டல் பேச்சுக்கு தலையசைத்து எல்லா விவரங்களையும் கொடுத்து விடுகின்றனர். எனவே, ஓடிபி விவரங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.