Meta to Shut Down மெட்டாவர்ஸ் கனவு தோல்வி! ரூ. 6.7 லட்சம் கோடி நஷ்டத்தால் ஹொரைசன் வேர்ல்ட்ஸ் தளத்தை மூடுகிறது மெட்டா நிறுவனம். மெட்டாவர்ஸ் கனவு முடிவுக்கு வருகிறதா?
சமூக வலைதள உலகின் ஜாம்பவனான மெட்டா (முன்னாள் பேஸ்புக்), தனது லட்சியத் திட்டமான 'ஹொரைசன் வேர்ல்ட்ஸ்' (Horizon Worlds) மெட்டாவர்ஸ் தளத்தை மூடுவதாக அறிவித்துள்ளது. 2021-ல் பேஸ்புக் நிறுவனத்தின் பெயரை 'மெட்டா' என்று மாற்றி, உலகையே டிஜிட்டல் மயமாக மாற்றப்போவதாக மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்தபோது, இது தொழில்நுட்ப உலகின் அடுத்த புரட்சி என்று கருதப்பட்டது. ஆனால், ஐந்தே ஆண்டுகளில் சுமார் 80 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 6.7 லட்சம் கோடி ரூபாய்) நஷ்டத்தை சந்தித்த பின், இந்த முடிவை நிறுவனம் எடுத்துள்ளது.
ஜூன் 2026-ல் முழுமையாக மூடப்படும் VR தளம்
மெட்டா வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, விர்ச்சுவல் ரியாலிட்டி (VR) சாதனங்களுக்கான ஹொரைசன் வேர்ல்ட்ஸ் தளம் வரும் ஜூன் 15, 2026 அன்று முழுமையாக மூடப்படும். நடப்பு மார்ச் மாத இறுதிக்குள் இந்த ஆப் 'குவெஸ்ட் ஸ்டோரிலிருந்து' (Quest Store) நீக்கப்படும். இருப்பினும், மொபைல் வெர்ஷனில் மட்டும் இந்த ஆப் தொடர்ந்து செயல்படும் எனத் தெரிகிறது. இந்த முடிவினால் பயனர்கள் தாங்கள் சேமித்து வைத்திருந்த டிஜிட்டல் சொத்துக்கள், அவதார் கிரெடிட்கள் என அனைத்தையும் இழக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏன் தோல்வியடைந்தது மெட்டாவர்ஸ்?
மெட்டாவர்ஸ் தளத்தில் பயனர்களின் வருகை எதிர்பார்த்த அளவை விட மிகக் குறைவாகவே இருந்தது. பல லட்சம் பயனர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாதம் ஒரு சில லட்சம் பேர் மட்டுமே இத்தளத்தைப் பயன்படுத்தினர். பயனர்களின் புகார்படி, இந்த தளம் மிகவும் வெறிச்சோடி காணப்பட்டதாகவும், சுவாரஸ்யமான அனுபவங்கள் குறைவாக இருந்ததோடு அடிக்கடி தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
உள்நாட்டு நிர்வாகக் குளறுபடிகளே காரணமா?
மெட்டாவின் ரியாலிட்டி லேப்ஸ் (Reality Labs) பிரிவில் பணியாற்றிய முன்னாள் ஊழியர்கள், இந்த தோல்விக்குத் தவறான நிர்வாக முடிவுகளே காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ளனர். பயனர்கள் மற்றும் டெவலப்பர்களின் கருத்துக்களுக்கு செவிசாய்க்காமல், யாருக்கும் தேவைப்படாத அம்சங்களில் கவனம் செலுத்தியதே இந்த பிரம்மாண்ட சரிவுக்கு வழிவகுத்தது என்று அவர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே மெட்டா நிறுவனம் ரியாலிட்டி லேப்ஸ் பிரிவில் பணியாற்றிய ஆயிரக்கணக்கான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.
AI மற்றும் ஸ்மார்ட் கிளாஸ் பக்கம் திரும்பும் ஜுக்கர்பெர்க்
மெட்டாவர்ஸ் பின்னடைவைச் சந்தித்தாலும், மெட்டா நிறுவனம் தற்போது செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ஸ்மார்ட் கிளாஸ் தயாரிப்புகளில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. குறிப்பாக 'ரே-பேன் மெட்டா' (Ray-Ban Meta) ஸ்மார்ட் கிளாஸ்கள் உலகளவில் மில்லியன் கணக்கில் விற்பனையாகி வருகின்றன. இதனால், விர்ச்சுவல் உலகத்தை விட நிஜ உலகிற்குத் தேவையான தொழில்நுட்பங்களில் அதிக முதலீடு செய்ய மார்க் ஜுக்கர்பெர்க் திட்டமிட்டுள்ளார்.


