24 நாடுகளில் வாட்ஸ் அப்‍களுக்கு 'ஸ்பைவேர்' தாக்குதல் குறித்து மெட்டா நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதில் இருந்து வாட்ஸ் அப்‍பை எப்படி பாதுகாக்கலாம் என பார்ப்போம்.

வாட்ஸ்அப்‍பில் ஸ்பைவேர் அட்டாக் 

இன்றைய நவீன உலகில் தொழில்நுட்பம் மிகவும் அத்திவாவசியமாக மாறி விட்டது. கல்வித்துறை, மருத்துவத்துறை, விண்வெளித்துறை என அனைத்து துறைகளிலும் தொழில்நுட்பம் முக்கிய பங்களிப்பு செய்து வருகிறது. ஆனால் அந்த தொழில்நுட்பமும் பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது. இணைய குற்றவாளிகள் அடிக்கடி சைபர் தாக்குதல்களை தொடுத்து தொழில்நுட்பத்தை சீர்குலைத்து வருகின்றனர்.

இப்போது ஸ்மார்ட்போன்கள் இல்லாதவர்கள் யாரும் இல்லை என்ற நிலை உருவாகி விட்டது. அதிலும் ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் சேவையை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் உலகம் முழுவதும் உள்ள வாட்ஸ்அப் பயனர்கள் 'ஸ்பைவேர்' வைரஸ் தாக்குதலால் கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

24 நாடுகளுக்கு வார்னிங்

வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டாவின் செய்திப்பிரிவு வாட்ஸ்அப்பில் 'ஸ்பைவேர்' வைரஸ் தாக்குதல் நடப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. ஆபத்தான ஸ்பைவேர் வைரஸ் குறைந்தது 24 நாடுகளில் உள்ள பயனர்களை குறிவைத்துள்ளதாகவும், இத்தாலியில் மட்டும் ஏழு உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் இருப்பதாகவும் மெட்டாவின் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதில் அதிர்ச்சியூட்டும் செய்தி என்னவென்றால், பயனர்கள் எந்த இணைப்பையும் கிளிக் செய்யாமலயே ஹேக்கர்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ் அப் வழியாக 'ஸ்பைவேர்' அட்டாக் செய்வது தெரியவந்துள்ளது. அதவாது பயனர்கள் எந்த சந்தேகத்துக்கிடமான இணைப்பையும் கிளிக் செய்ய வேண்டிய அவசியமின்றி ஹேக்கர்கள் சாதனங்களில் ஊடுருவ முடியும். வாட்ஸ்அப் பயனர்களை குறிவைக்க இஸ்ரேலிய ஸ்பைவேர் பயன்படுத்தப்படுகிறது.

'ஜீரோ-கிளிக்' ஹேக்கிங்

இஸ்ரேலிய கண்காணிப்பு நிறுவனமான பாரகன் சொல்யூஷன்ஸுடன் இணைக்கப்பட்ட ஒரு ஸ்பைவேர் அங்குள்ள பத்திரிகையாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்களின் வாட்ஸ்அப் கணக்குகளை ஹேக் செய்ய பயன்படுத்தப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் "ஜீரோ-கிளிக்" ஹேக்கிங் நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. 

பாரம்பரிய பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தவிர்ப்பதால் இந்த வகையான ஹேக்கிங் மிகவும் ஆபத்தானதாகக் கருதப்படுகிறது. வாட்ஸ்அப் பயனர்களை குறிவைக்கும் ஸ்பைவேரை மெட்டா நிறுவனம் கண்டறிந்து உடனடியாக இத்தாலியின் தேசிய சைபர் பாதுகாப்பு நிறுவனத்திற்கு எச்சரிக்கை செய்துள்ளது. 

வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப்பை, மொபைலை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?

* உங்கள் வாட்ஸ்அப்பை உடனடியாகப் புதுப்பிக்கவும்.

* கூடுதல் பாதுகாப்பிற்காக இரண்டு-படி சரிபார்ப்பை இயக்கவும். 

* சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் மற்றும் தெரியாத செய்திகளைத் தவிர்க்கவும்.

* பூஜ்ஜிய-கிளிக் ஹேக்கிங் ஒரு பெரிய அச்சுறுத்தலாக மாறி வருவதால், வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் சாதனங்களை அங்கீகரிக்கப்படாத கண்காணிப்பிலிருந்து பாதுகாக்க விழிப்புடன் இருக்க வேண்டும்.