அடுத்தடுத்து புது எலெக்ட்ரிக் கார்கள்... பக்கா பிளான் போடும் மாருதி சுசுகி..!
இந்திய சந்தையில் ஓரளவு குறைந்த விலையில் எலெக்ட்ரிக் கார்களை வெளியிடுவதே மிகவும் சவாலான காரியம் ஆகும்.
மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் பல்வேறு எலெக்ட்ரிக் கார் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. போட்டி நிறுவனங்களை எதிர்கொண்டு, இந்திய சந்தையில் முன்னணி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளராக உருவெடுக்க மாருதி சுசுகி திட்டமிட்டுள்ளது.
தனது முதல் எலெக்ட்ரிக் வாகனத்தை 2025 வாக்கில் அறிமுகம் செய்ய மாருதி சுசுகி திட்டமிட்டு இருக்கிறது. இதோடு தனது உற்பத்தி ஆலைகளில் எலெக்ட்ரிக் வாகன மாடல்களை உற்பத்தி செய்யவும் மாருதி சுசுகி முடிவு செய்து உள்ளது. முதற்கட்டமாக மாருதி சுசுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் வாகனம் சுசுகி மோட்டார் நிறுவனத்தின் குஜராத் ஆலையில் இருந்து வெளியிடப்பட இருக்கிறது.
அதிக வரவேற்பு இல்லை:
"இந்திய சந்தையில் எங்களின் எலெக்ட்ரிக் மாடலை அறிமுகம் செய்வதில், போட்டி நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது சற்றே பின் தங்கிய நிலையில் இருக்கிறோம். எனினும், தற்போதைய சூழலில் எலெக்ட்ரிக் வாகன சந்தை அதிகளவு சூடு பிடிக்கவில்லை என்றே நாங்கள் கருதுகிறோம். இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை இன்றும் குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்து வருகிறது," என மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஹிசாஷி டகுஷி தெரிவித்து இருக்கிறார்.
தொடர் சோதனை:
"கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக நாங்கள், எங்களின் தற்போதைய கார் மாடல்களில் பேட்டரி மற்றும் மோட்டார்களை பொருத்தி எலெக்ட்ரிக் வேரியண்ட்களில் முறையான டெஸ்டிங்கை செய்து வருகிறோம். இந்திய சூழலுக்கு ஏற்றவாரு தலைசிறந்த எலெக்ட்ரிக் தொழில்நுட்பத்தை வழங்க வேண்டும் என்ற குறிக்கோளை கொண்டிருக்கிறோம். இந்திய சூழலில் இது மிகவும் கடினமான ஒன்று ஆகும்," என அவர் மேலும் தெரிவித்தார்.
எலெக்ட்ரிக் வாகன சந்தை:
சமீபத்தில் வெளியான FADA அறிக்கையின் படி பயணிகள் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் 2021-22 ஆண்டு வாக்கில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 85.37 சதவீத பங்குகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் இந்திய சந்தையில் மொத்தம் 17 ஆயிரத்து 802 எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 15 ஆயிரத்து 198 யூனிட்களை டாடா மோட்டார்ஸ் மட்டும் விற்பனை செய்து இருக்கிறது.
விலை விவரம்:
"எலெக்ட்ரிக் வாகன உற்பத்திக்கு தற்போதைய சூழலில் அதிக செலவாகிறது. மேலும் இந்த தொழில்நுட்பம் கொண்ட வாகனங்களை உருவாக்குவது மிகவும் கடினமான காரியம் ஆகும். மேலும் ஓரளவு குறைந்த விலையில் எலெக்ட்ரிக் கார்களை வெளியிடுவதே மிகவும் சவாலான காரியம் ஆகும். அந்த வகையில் மாருதி சுசுகி வெளியிடும் எலெக்ட்ரிக் கார் விலை பற்றி தற்போதைக்கு எந்த தகவலையும் உறுதியாக கூற முடியாது," என அவர் தெரிவித்தார்.