LPG Crisis மத்திய கிழக்கு போர் காரணமாக சிலிண்டர் தட்டுப்பாடு. சோமாட்டோ, ஸ்விக்கி டெலிவரி பாதிப்பு. வருமானம் இன்றி தவிக்கும் ஊழியர்கள். டெலிவரி பாய்கள்!

உலகையே உலுக்கி வரும் மத்திய கிழக்கு போர் பதற்றம், தற்போது சாமானிய மக்களின் உணவுக் கிண்ணத்திலும் கைவைக்கத் தொடங்கியுள்ளது. போரினால் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகச் சங்கிலியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், இந்தியாவில் எல்பிஜி (LPG) சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்தத் தட்டுப்பாடு வெறும் சமையலறைகளோடு நின்றுவிடாமல், ஆன்லைன் உணவு விநியோகத் துறையையும் (Food Delivery Sector) புரட்டிப் போட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஸ்தம்பிக்கும் ஹோட்டல்கள்; குறையும் ஆர்டர்கள்

எரிவாயு தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள் மற்றும் ஹோட்டல்கள் முழுத் திறனுடன் செயல்பட முடியாமல் திணறி வருகின்றன. பல உணவகங்கள் தங்கள் மெனுவில் உள்ள முக்கியமான உணவுகளைத் தவிர்க்கத் தொடங்கியுள்ளன. இதனால் சோமாட்டோ (Zomato) மற்றும் ஸ்விக்கி (Swiggy) போன்ற செயலிகளில் வழக்கமாக வரும் ஆர்டர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. உணவு தயாராவதில் ஏற்படும் தாமதம் வாடிக்கையாளர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது.

டெலிவரி ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

இந்த ஒட்டுமொத்தப் பிரச்சனையில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது 'கிக் வொர்க்கர்ஸ்' (Gig Workers) எனப்படும் டெலிவரி ஊழியர்கள்தான். ஆர்டர்கள் குறைந்ததால் இவர்களது தினசரி வருமானம் பாதியாகச் சரிந்துள்ளது. "ஒரு நாளைக்கு 15 முதல் 20 ஆர்டர்கள் செய்த எங்களுக்கு, இப்போது 5 ஆர்டர்கள் கிடைப்பதே குதிரைக்கொம்பாக உள்ளது" என ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எரிபொருள் விலை உயர்வு ஒருபுறம், வருமான இழப்பு மறுபுறம் என இவர்கள் இரட்டைச் சுமையைச் சுமக்கின்றனர்.

டெலிவரி செயலிகளின் நிலைப்பாடு

தற்போதைய இக்கட்டான சூழலைச் சமாளிக்க சோமாட்டோ மற்றும் ஸ்விக்கி நிறுவனங்கள் தீவிர முயற்சிகளை எடுத்து வருகின்றன. உணவகங்கள் மற்றும் டெலிவரி ஊழியர்களுடன் இணைந்து மாற்று வழிகளை ஆராய்ந்து வரும் வேளையில், வாடிக்கையாளர்கள் பொறுமை காக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். போர் நீடித்தால், உணவு டெலிவரி கட்டணங்கள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாகத் தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.