பழைய மாருதி 800-ஐ சோலார் காராக மாற்றிய ஆசிரியர்...!
கடந்த பதினொரு ஆண்டுகளுக்கு முன்பே சோலார் கார் உருவாக்குவதற்கான ஆய்வு பணிகளை துவங்கி இருக்கிறார்.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருந்து வருகிறது. இவற்றுக்கு மாற்றாக அறிமுகமாகும் எலெக்ட்ரிக் வாகனங்கள் விலையும் அதிகமாகவே நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இதை கருத்தில் கொண்ட காஷ்மீரை சேர்ந்த கணித ஆசிரியர் ஒருவர் தனக்கென சொந்தமாக சோலார் கார் ஒன்றை உருவாக்கிக் கொண்டுள்ளார்.
காஷ்மீரை சேர்ந்தவர் தான் பிலால் அகமது. கணித ஆசிரியரான இவர் கடந்த பதினொரு ஆண்டுகளுக்கு முன்பே சோலார் கார் உருவாக்குவதற்கான ஆய்வு பணிகளை துவங்கி இருக்கிறார். சிறு வயது முதலே ஆட்டோமொபைல் பிரிவில் அதிகம் ஆர்வம் கொண்டிருந்தார் பிலால் அகமது. ஒரு கட்டத்தில் ஆர்வத்தை கொட்டி, சொந்தமாக கார் ஒன்றை உருவாக்க முடிவு செய்தார்.
கார் கதவுகளின் சிறப்பம்சம்:
இதற்காக மாருதி சுசுகி 800 ஹேச்பேக் கார் மாடலை வாங்கினார். பின் இதை சூரிய சக்தி மூலம் இயங்க வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். இந்த காரின் மிக முக்கிய சிறப்பம்சம், இதன் கதவுகள் இறக்கைகளை போன்றே திறக்கிறது. இது போன்ற கதவுகள் டெஸ்லா மாடல் X காரில் வழங்கப்பட்டு இறுக்கிறது. இந்த கதவுகள் இருப்பதால், காரில் எளிதில் நுழைந்து, வெளியேற முடியும். இதுதவிர காரின் தோற்றத்தை இது ஃபேன்சியாக மாற்றுகிறது.
சோலார் பேனல்கள் காரின் முன்புற பொனெட் மற்றும் கதவுகளில் பொருத்தப்பட்டு இருக்கிறது. காரின் பின்புற கதவு மற்றும் ஜன்னல்களின் மேல் கருப்பு நிற சோலார் பேனல்கள் இடம்பெற்று உள்ளன. காரின் உள்புறமாக சார்ஜிங் போர்ட் ஒன்றும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் முழுமையாக திறந்து இருக்கும் போது, அதில் சிவப்பு நிறத்தில் Innovative Car என எழுதப்பட்டு இருப்பதை பார்க்க முடியும்.
அசத்தலான சோலார் பேனல்கள்:
இந்த காரின் முன்புற நம்பர் பிளேட் மீதும் Innovative Car என்று எழுதப்பட்டு இருக்கிறது. இது மட்டும் இன்றி காரின் வீல் ரிம்கள் மற்றும் முன்புற கிரில் உள்ளிட்டவைகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அகமது உருவாக்கி இருக்கும் சோலார் கார், மோனோ-கிரிஸ்டலைன் சோலார் பேனல்களால் உற்பத்தி செய்யப்படும் மின்சக்தியில் மட்டும் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் சோலார் பேனல்கள், மிக குறைந்த சூரிய சக்தி கொண்டு அதிக மின்சக்தியை உருவாக்கும் வகையில் டிசைன் செய்யப்பட்டு உள்ளது.