2 நாட்கள் அன்லிமிடெட் பிளான் இலவசம் - பயனர்களை குஷிப்படுத்திய ஜியோ
சேவை முடங்கியதை அடுத்து இரண்டு நாட்களுக்கு இலவச சேவை வழங்குவதாக ரிலையன்ஸ் ஜியோ அறிவித்து இருக்கிறது.
நாடு முழுக்க பல்வேறு பகுதிகளில் ரிலையன்ஸ் ஜியோ சேவையில் இடையூறு ஏற்பட்டது. நெட்வொர்க் குறைபாடு காரணமாக அழைப்புகள் மற்றும் இணைய சேவை உள்ளிட்டவைகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதிகபட்சமாக சுமார் எட்டு மணி நேரத்திற்கு இந்த பிரச்சினை நீடித்தது. இதன் காரணமாக ஜியோ வாடிக்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
சேவையில் இடையூறு ஏற்பட்டதை அடுத்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற திட்டத்தை இரண்டு நாட்களுக்கு இலவசமாக வழங்குகிறது. இந்த திட்டம் பயனர்களின் தற்போதைய திட்டத்துடன் இணைக்கப்பட்டு விடும். இதனால் இந்த இடையூறில் பாதிக்கப்பட்ட பயனர்கள் திட்ட வேலிடிட்டி இரண்டு நாட்கள் நீட்டிக்கப்படும்.
நெட்வொர்க் குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு ஜியோ குறுந்தகவல் அனுப்பி இருக்கிறது. அதன்படி இரண்டு நாட்களுக்கான வேலிடிட்டி நீட்டிக்கப்படுவதாகவும், இது தானாக செயல்படுத்தப்பட்டு விடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக கடந்த ஆண்டும் இதேபோன்ற நெட்வொர்க் குறைபாடு ஏற்பட்டதை அடுத்து ஜியோ பயனர்களுக்கு இலவச சேவையை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு இரண்டு நாட்கள் கூடுதல் வேலிடிட்டி வழங்கப்படுவதாக கூறப்பட்டாலும், இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோபோன் சலுகைகளை மாற்றியமைத்து புதிதாக ரூ. 152 விலையில் சலுகை ஒன்றை அறிவித்தது.
இதில் அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 0.5GB டேட்டா, 300 SMS, ஜியோ செயலிகளை பயன்படுத்துவதற்கான சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இந்த சலுகையியின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.