ஜேக் டோர்சி ட்விட்டர் நிறுவனத்திற்குத் தலைமை வகித்தபோது அவரும் அவரது குழுவினரும் இந்திய சட்டத்தை தொடர்ந்து மீறி செயல்பட்டு வந்தனர் என மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்திற்கு ஜேக் டோர்சி தலைமை வகித்தபோது அவரும் அவரது குழுவினரும் இந்திய சட்டத்தை தொடர்ந்து மீறினர் என்றும் உண்மையில் 2020 முதல் 2022 வரை சட்டத்திற்கு இணங்கவில்லை எனவும் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இடை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜாக் டோர்சி பேட்டி ஒன்றில் பேசும்போது, இந்தியாவில் விவசாயிகள் போராட்டத்தின்போது, இந்திய அரசு தங்களுக்கு நெருக்கடி கொடுத்ததாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
"விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகப் பதிவிட்ட கணக்குகளை முடக்க பலமுறை அழுத்தம் கொடுக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள ட்விட்டர் அலுவலகங்களை மூடிவிடுவோம் என்றும், ஊழியர்கள் வீடுகளில் ரெய்டு நடத்துவோம் என்றும் எச்சரித்தார்கள். இதெல்லாம் ஜனநாயக நாடு என்று சொல்லப்படும் இந்தியாவில் நடக்கிறது" என்று ஜாக் டோர்சி விமர்சித்திருக்கிறார்.
கூகுள் டிரைவ் அடிக்கடி ஸ்டோரேஜ் ஃபுல் ஆகிறதா? ஈசியாக ஸ்பேஸ் உருவாக்கும் வழிகள் இதோ!
இந்தக் கருத்துகளை மறுத்துள்ள மத்திய அமைச்சர் "இது அப்பட்டமான பொய்" என்று நிராகரித்துள்ளார். ட்விட்டரில் அவர் எழுதியுள்ள பதிவில், "டோர்சி மற்றும் அவரது குழுவின் கீழ் ட்விட்டர் இந்திய சட்டத்தை தொடர்ந்து மீறிக்கொண்டிருந்தது. உண்மையில், அவர்கள் 2020 முதல் 2022 வரை சட்டத்திற்கு இணங்கவே இல்லை. இறுதியாக ஜூன் 2022 இல் தான் சட்டத்துக்கு இணங்கினார்கள்." என்று சொல்கிறார்.
மேலும், "ட்விட்டர் ஊழியர்கள் யாரும் சிறைக்குச் செல்லவில்லை, ட்விட்டர் அலுவலகமும் மூடப்பட்டவில்லை. டோர்சியின் தலைமையில் ட்விட்டர் இந்தியச் சட்டத்தின் இறையாண்மையை ஏற்கவில்லை. இந்தியச் சட்டங்கள் தங்களுக்கு மட்டும் பொருந்தாதது போல் நடந்துகொண்டது. இந்தியாவின் இறையாண்மையை உறுதிப்படுத்தும் உரிமை அரசுக்கு உள்ளது. இந்தியாவில் செயல்படும் அனைத்து நிறுவனங்களும் சட்டங்களைப் பின்பற்றுகின்றன." என்று தெரிவித்துள்ளார்.
2021 ஜனவரியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தின் போது பல தவறான தகவல்கள் பரவினை என்றும் மத்திய அமைச்சர் கூறுகிறார். "அரசாங்கம் ட்விட்டரில் பரவும் தவறான தகவல்களை அகற்றவேண்டிய கட்டாயத்தில் இருந்தது. அந்தத் தகவல்கள் போலியான செய்திகளின் அடிப்படையில் அசம்பாவிதங்களைத் தூண்டுபவை. ஜாக் தலைமையின் கீழ் ட்விட்டர் ஒருதலைபட்சமாக நடந்துகொண்டது. அதனால்தான் ட்விட்டரில் இருந்து தவறான தகவல்களை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது. அமெரிக்காவில் இதே போன்ற நிகழ்வுகள் நடந்தபோது, அதை அவர்களே செய்தார்கள். ஆனால், இந்தியா செய்யவில்லை" என்று அமைச்சர் குறைகூறுகிறார்.
"இந்தியச் சட்டங்களுக்கு இணங்குவதை உறுதி செய்வதில் மட்டுமே எங்கள் கவனம் இருந்தது. ட்விட்டரின் தன்னிச்சையான செயல்பாடு, அப்பட்டமான பாகுபாடு, பாரபட்சமான நடத்தை மற்றும் துஷ்பிரயோகம் குறித்து இப்போது பொதுவெளியிலேயே ஏராளமான ஆதாரங்கள் உள்ளன" என்றும் ராஜீவ் சந்திரசேகர் குறிப்பிட்டுள்ளார்.
டோர்சியின் கீழ் இருந்த ட்விட்டர் நிறுவனம் இந்தியச் சட்டத்தை மட்டும் மீறவில்லை, நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள 14 மற்றும் 19வது விதிகளை மீறியது எனவும் தவறான தகவல்களை ஆயுதமாக பயன்படுத்துவதற்கு உதவியது எனவும் அமைச்சர் ராஜீவ் கூறி இருக்கிறார். "இணைய பயன்பாடு நம்பகத்தன்மையுடன் பாதுகாப்பாகவும் பொறுப்புணர்வுடனும் இருக்க வேண்டும். இதனை உறுதி செய்வதற்கான சட்டங்களுக்கு இணங்க வேண்டும். இந்தியாவில் செயல்படும் அனைத்து நிறுவனங்களும் இதில் தெளிவாக இருங்கள்" என்றும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
வாட்ஸ்அப் கீபோர்டில் மாற்றம்! புதிய வடிவமைப்புடன் அறிமுகமாகும் எமோஜி பார் அப்டேட்!
