அடித்து நொறுக்கப்பட்ட ஐபோன் உற்பத்தி நிறுவனம்... ஊழியர்கள் கடுங்கோபம்..!
கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தில் WISTRON CROP செல்போன் உற்பத்தி தொழிற்சாலை இயங்கி வருகிறது. தைவானை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் இந்த நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் இங்கிருந்து ஆப்பிள் ஐபோன்கள் உற்பத்தி செய்து வருகிறது.
கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தில் WISTRON CROP செல்போன் உற்பத்தி தொழிற்சாலை இயங்கி வருகிறது. தைவானை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் இந்த நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் இங்கிருந்து ஆப்பிள் ஐபோன்கள் உற்பத்தி செய்து வருகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை இந்த தொழிற்சாலையில் பணி செய்யும் ஊழியர்கள் தொழிற்சாலையை முற்றுகையிட்டதோடு, உள்ளே நுழைந்து அடித்து நொறுக்கினர்.
கோலார் மாவட்டத்தின் நரசபுரா பகுதியில் உள்ள தொழிற்சாலைக்கு முன்னர் கூடிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் முறையான ஊதியம் கேட்டும், நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக கொடுக்கும் படியும் கோரிக்கை வைத்து போராடியுள்ளனர். விதிமுறைக்கு மாறாக பணி நேரம் போக கூடுதலாக ஊழியர்களை பணி செய்யும் படி தங்களை தொழிற்சாலை நிறுவனம் வற்புறுத்தியதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஊழியர்களுக்கும், தொழிற்சாலை நிர்வாகத்தினருக்கும் இடையிலான பேச்சு வார்த்தை தோல்வியை தழுவியதை அடுத்து கற்களை வீசி தொழிற்சாலையை சேதப்படுத்தியதோடு, வாகனங்களுக்கு தீ வைத்துள்ளனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஊழியர்களை தடியடி நடத்தி கலைத்துள்ளார். மேலும் சுமார் 80க்கும் மேற்பட்ட ஊழியர்களை கைதும் செய்துள்ளனர்.
காலை ஷிப்டில் வேலை செய்த ஊழியர்கள் நிர்வாகத்தினரை சந்தித்து ஊதியம் கேட்டு முறையிட்டுள்ளனர். ஒரு சிலர் இரண்டு மாதத்திற்கும் மேலான ஊதியம் நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர். சிசிடிவி காட்சிகளை வைத்து எங்களது விசாரணையை தொடங்கியுள்ளோம் என கோலார் போலீஸ் எஸ்பி கார்த்திக் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இரண்டு மாதத்திற்கும் மேலான சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. அதை கொடுக்குமாறு பலமுறை நிர்வாகத்தினரிடம் கோரிக்கை வைத்து உள்ளோம். பலருக்கு 16 ஆயிரம் ரூபாய் என சொல்லி 12 ஆயிரம் தான் கொடுக்கிறார்கள். அது கூட தாமதமாக தான் கிடைக்கிறது. தொழிலக சட்டத்திற்கு மாறாக தினந்தோறும் 12 மணி நேரம் வரை வேலை செய்ய வேண்டி உள்ளது என ஊழியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.