ஐபோன் 13-இல் Bug-னு யாரு சொன்னா? ஒரு வழியாக மௌனம் கலைத்த ஆப்பிள்
ஐபோன் 13 மாடலில் நாய்ஸ் கேன்சலேஷன் அம்சம் இல்லாதது பற்றிய விவகாரத்தில் ஆப்பிள் மௌனம் கலைத்தது.
ஐபோன் 13 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களில் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கிடைக்காது என ஆப்பிள் சப்போர்ட் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. கடந்த பல ஆண்டுகளாக அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன்களில் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்பட்டு வந்தது. ஐபோன் 13 அறிமுகமானது முதல் இந்த வசதி இல்லாதது Bug என்றே கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில், ஐபோன் 13 மாடலில் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்படாது என ஆப்பிள் அதிரடியாக அறிவித்து இருக்கிறது. "இதுபற்றிய அப்டேட் எங்களிடம் இருக்கிறது. ஐபோன் 13 மாடல்களில் போன் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்படவில்லை, இதனாலேயே இதனை செட்டிங்ஸ்-இல் உங்களால் பார்க்க முடியவில்லை," என ஆப்பிள் சப்போர்ட் குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
போன் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி இல்லை என்பதை மட்டும் தெரிவித்த நிலையில், இந்த அம்சம் வழங்கப்படாததற்கான காரணத்தை ஆப்பிள் தெரிவிக்கவில்லை. ஐபோன் 13 மாடல்களில் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி இல்லாத விவகாரத்தை பல வாரங்களுக்கு முன்பே ரெடிட் பயனர் ஒருவர் குற்றம்சாட்டி இருந்தார். பின் இந்த பிழையை சரி செய்து வருவதாக ஆப்பிள் சப்போர்ட் அதிகாரி தன்னிடம் தெரிவித்ததாக அவர் ரெடிட் தளத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
"ஆப்பிள் பொறியாளர்கள் இந்த பிழையை சரி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக ஆப்பிள் சப்போர்ட் தரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மென்பொருள் பிரச்சினையா அல்லது வன்பொருள் பிரச்சினையா என்பது குறித்து அவர்கள் தெரிவிக்கவில்லை. எதுவாக இருந்தாலும் இதற்கான தீர்வு வரும் வாரங்களில் கிடைத்துவிடும்," என அவர் பதிவிட்டார்.
பிழை சரி செய்யப்பட்டு விரைவில் அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த பயனர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், ஐபோன் 13 சீரிஸ் மாடல்களில் இந்த அம்சம் வழங்குவதை பற்றி திட்டமிடவே இல்லை என தெரியவந்துள்ளது. இதற்கான காரணமும் மர்மமாகவே உள்ளது.
ஐபோன் 13 இல்லாமல் முந்தைய ஐபோன் சீரிஸ் மாடல்களில் போன் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி தானாகவே செயல்படுத்தப்பட்டு இருக்கும். இதனை பயனர்கள், ஐபோனின் Settings > Accessibility > Audio/Visual > Phone Noise Cancellation ஆப்ஷன்களில் இயக்கலாம்.