WiFi இந்தியாவில் வை-பை 6E மற்றும் வை-பை 7 சேவைக்கு அனுமதி. 6 GHz அலைக்கற்றை ஒதுக்கீட்டால் இணைய வேகம் பல மடங்கு அதிகரிக்கும்.

இந்திய இணைய உலகில் ஒரு மிகப்பெரிய மாற்றம் நிகழவுள்ளது. மத்திய தொலைத்தொடர்புத் துறை (DoT) 6 ஜிகாஹெர்ட்ஸ் (GHz) அலைக்கற்றையில் 500 மெகாஹெர்ட்ஸை உரிமம் இல்லாத பயன்பாட்டிற்காக விடுவித்துள்ளது. இந்த அதிரடி அறிவிப்பின் மூலம், இந்தியாவில் வை-பை 6E (Wi-Fi 6E) மற்றும் அதிநவீன வை-பை 7 (Wi-Fi 7) சேவைகளைத் தொடங்குவதற்கான வழி பிறந்துள்ளது. இது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இணைய வேகத்தை நினைத்துப்பார்க்காத அளவிற்கு உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உரிமம் இல்லா பயன்பாடு

அரசாங்கத்தின் இந்த புதிய அறிவிப்பின்படி, 5925–6425 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசையில் இயங்கும் குறைந்த சக்தி கொண்ட உட்புற (Indoor) மற்றும் மிகக் குறைந்த சக்தி கொண்ட வெளிப்புற (Outdoor) வயர்லெஸ் சாதனங்களை நிறுவ இனி தனியாக உரிமம் பெறத் தேவையில்லை. அதாவது, உங்கள் ரவுட்டர்கள் மற்றும் ஸ்மார்ட் சாதனங்கள் இனி எவ்வித தடையுமின்றி அதிவேகத்தில் இயங்க முடியும். இது பயனர்களுக்கு இடையூறு இல்லாத, பாதுகாப்பான இணைய அனுபவத்தை உறுதி செய்யும்.

மொபைல் சேவைக்குத் தனி ஒதுக்கீடு

வை-பை சேவைகளுக்காக 6 GHz அலைக்கற்றையின் கீழ் பகுதியை (Lower Band) விடுவித்துள்ள அதே வேளையில், அதன் மேல் பகுதியான 6425–7125 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசையை அரசாங்கம் மொபைல் சேவைகளுக்காக ஒதுக்கியுள்ளது. தேசிய அதிர்வெண் ஒதுக்கீடு திட்டத்தின் (NFAP) கீழ், இந்த உயர் அலைவரிசைகள் எதிர்கால அட்வான்ஸ்டு மொபைல் சேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வை-பை மற்றும் மொபைல் நெட்வொர்க் இரண்டும் ஒன்றோடொன்று மோதாமல் செயல்பட உதவும்.

தொழில் நிறுவனங்களின் மாறுபட்ட கருத்து

ஆப்பிள், அமேசான், மெட்டா மற்றும் கூகுள் போன்ற உலகளாவிய தொழில்நுட்ப ஜாம்பவான்கள் முழு 1200 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையையும் வை-பை பயன்பாட்டிற்காக விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், ரிலையன்ஸ் ஜியோ போன்ற உள்நாட்டு நிறுவனங்கள் இந்த அலைக்கற்றையை ஏலத்தில் விட வேண்டும் என வலியுறுத்தின. இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த அரசு, தற்போது 500 மெகாஹெர்ட்ஸை மட்டும் வை-பை பயன்பாட்டிற்கு விடுவித்து சமநிலையான முடிவை எடுத்துள்ளது.

எதிர்காலத்திற்கான அடித்தளம்

இந்த நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய ITU-APT அறக்கட்டளையின் தலைவர் பாரத் பாட்டியா, "இது இந்தியாவின் 5ஜி (5G) மற்றும் வருங்கால 6ஜி (6G) முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும்," எனக் கூறியுள்ளார். அதேபோல், பிராட்பேண்ட் உபகரண தயாரிப்பு நிறுவனமான GX குழுமத்தின் சிஇஓ பரிதோஷ் பிரஜாபதி, "இது பாதுகாப்பான மற்றும் அடுத்த தலைமுறை நெட்வொர்க்கிங் தீர்வுகளுக்கான இந்தியாவின் நிலையை வலுப்படுத்தும்," எனத் தெரிவித்துள்ளார். இனி வரும் காலங்களில் பஃபரிங் இல்லாத ஸ்ட்ரீமிங் மற்றும் அதிவேக கேமிங் அனுபவம் உறுதி!