ஹைதராபாத்தில் ஒரு பெண்ணிடம் கிறிஸ் கெய்ல் பெயரில் ரூ.2.8 கோடி மோசடி நடந்துள்ளது. ஒரு போலி காபி நிறுவனத்தில் முதலீடு செய்ய வற்புறுத்தப்பட்டு பணம் பறித்துள்ளனர். இந்த மோசடியில் அவரது சகோதரரும் உடந்தையாக இருந்திருக்கிறார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த 60 வயது பெண் ஒருவரிடம் ரூ.2.8 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. பிரபல மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் பெயரை பயன்படுத்தி அந்தப் பெண்ணிடமிருந்து பணம் பறிக்கப்பட்டுள்ளது. போலி காபி தூள் தயாரிக்கும் நிறுவனத்தில் முதலீடு செய்வதாகச் சொல்லி ஏமாற்றியுள்ளனர். இந்த மோசடி கும்பலுக்கு பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் ஒருவரும் உடந்தையாக இருந்திருக்கிறார்.

ரூ.5.7 கோடி மதிப்புள்ள முதலீட்டுத் திட்டத்தில் அதிக வருமானம் கிடைக்கும் என்று உறுதி அளித்துள்ளனர். 2019ஆம் ஆண்டில், பாதிக்கப்பட்ட பெண்ணை அவரது சகோதரரும் அவரது மனைவியும் தொடர்பு கொண்டனர். அவரது முதலீட்டில் மாதந்தோறும் 4% வருமானம் கிடைக்கும் என்று கூறியுள்ளனர். முதலீடு செய்யப்பட்ட பணம் கென்யாவில் உள்ள ஒரு காபி தூள் உற்பத்தி நிறுவனத்திற்குச் செல்லும் என்றும் அந்த நிறுவனம் அமெரிக்காவில் ஒரு புதிய ஆலை அமைத்து வேகமாக விரிவடைந்து வருகிறது என்றும் கூறியிருக்கிறார்கள்.

மோசடி செய்பவர்கள் அந்தப் பெண்ணுக்கு கிறிஸ் கெயிலின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைக் காட்டி, கெய்ல் இந்த காபி நிறுவனத்தின் விளம்பரதாரர் என்று தெரிவித்துள்ளனர். நிறுவனத்தின் உரிமையாளரைத் தங்களுக்குத் தெரியும் என்று கூறியுள்ள மோசடி கும்பல், தங்களில் ஒருவர் அந்த நிறுவனத்தில் பங்குதாரராகப் போகிறார் என்று கதை அளந்துள்ளனர். இவ்வளவு சொன்னதால் தனது சகோதரனை நம்பி, அந்தப் பெண் ரூ.2.8 கோடி பணத்தை முதலீடு செய்துவிட்டார். அதோடு நில்லாமல் தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களிடம் மேலும் ரூ.2.2 கோடி முதலீடு செய்யச் சொல்லிருக்கிறார். மற்றவர்கள் ரூ.70 லட்சம் முதலீடு செய்தனர்.

ஆரம்பத்தில், முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக சிறிது காலம் சொன்னபடி வருமானத்தை கிடைப்பது போல் காட்டியுள்ளனர். ஆனால், கொஞ்ச காலத்திற்குப் பிறகு பணம் வருவது நின்றுவிட்டது. இது குறித்து அந்தப் பெண் தனது சகோதரரிடம் கேட்டபோது, ​​நிறுவனத்தின் அமெரிக்கப் பிரிவு செயல்பட்டு வருவதாகக் கூறியுள்ளார். அந்தப் பெண் பணம் கிடைக்காதது குறித்து அடிக்கடி கேள்விகளைக் கேட்கத் தொடங்கியதும், சரியான பதில் கிடைக்கவில்லை. பிறகு அந்தப் பெண் யாரையும் தொடர்புகொள்ள முடியாமலும் போய்விட்டது.

இந்த மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் ரூ.5.7 கோடி முதலீடு செய்திருந்தனர். அவர்களுக்கு ரூ.90 லட்சம் மட்டுமே வருமானம் கிடைத்துள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், போலீசார் ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.