ஸ்மார்ட்போன்கள் நமது வாழ்க்கையின் ஒரு அங்கமாகி விட்ட நிலையில், மால்வேர் எனப்படும் வைரஸ்கள் போன்களை அச்சுறுத்துகின்றன. இவற்றில் இருந்து போன்களை எப்படி பாதுகாக்கலாம்? என பார்க்கலாம்.
ஸ்மார்ட்போன்களில் வைரஸ்
இன்றைய காலக்கட்டத்தில் ஸ்மார்ட்போன்கள் இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஏனெனில் ஸ்மார்ட்போன்கள் நமது அன்றாட வாழ்க்கையின் பிரிக்க முடியாத பகுதியாக மாறிவிட்டன. மற்றவர்களுடன் பேச, எஸ்எம்எஸ் அனுப்ப அல்லது சமூக ஊடகங்களில் ஈடுபடுவதன் மூலம் நம்மை உலகத்துடன் இணைக்க ஸ்மார்ட்போன்கள் உதவுகின்றன. இது மட்டுமல்லாமல், ஆன்லைன் வங்கி, பணம் செலுத்துதல் மற்றும் அன்றாட வாழ்க்கைக்கு ஒருவருக்கு தேவையான பிற பணிகளுக்கும் ஸ்மார்ட்போன்கள் உதவியாக உள்ளன.
ஆனால் இந்த ஸ்மார்ட்போன்களில் மால்வேர் (Malware) எனப்படும் வைரஸ்கள் எளிதில் புகுந்து விடுகின்றன. அவை உங்கள் போன்களுக்கு தீங்கு விளைவிக்கும். மால்வேர் வைரஸ்களை புகுத்தி ஹேக்கர்கள் உங்களின் தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்களை தவறான வழியில் பயன்படுத்தலாம். மேலும் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை கூட ஹேக்கர்கள் எடுத்து விடுவார்கள். ஆகவே வைரஸ்கள் புகாதவண்ணம் ஸ்மார்ட்போன்களை பாதுகாப்பது அவசியமாகிறது.
எப்படி பாதுகாப்பது?
ஸ்மார்ட்போன்களை வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாக்க கூகுள் சில ஆண்டுகளுக்கு முன்பு Android பயனர்களுக்காக Play Protect அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இந்த அம்சத்தை கூகுள் பிளே ஸ்டோரில் (Google Play Store) இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது உங்கள் ஸ்மார்ட்போனில் வழக்கமான பாதுகாப்பு சோதனைகளை செய்கிறது. செல்போனில் ஏதேனும் தீங்கு விளைவிக்கும் வைரஸ்களை கண்டறிந்தால் Play Protect உடனடியாக பயனரை எச்சரிக்கிறது. இதன்மூலம் மால்வேர்களிடம் இருந்து போன்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
Play Protect எப்படி பயன்படுத்துவது?
* உங்கள் ஸ்மார்ட்போனில் Google Play Store பயன்பாட்டைத் திறக்கவும்
* மேல் வலது மூலையில் உள்ள உங்கள் சுயவிவர ஐகானைத் தட்டவும்.
* மெனுவிலிருந்து 'Play Protect' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
*பின்பு உங்கள் போனில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உள்ளதா எனச் சரிபார்க்க 'ஸ்கேன்' என்பதைக் கிளிக் செய்யவும்.
* உங்கள் போனில் எதும் வைரஸ்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் 'Play Protect' உடனே அலர்ட் செய்யும். நீங்கள் உடனடியாக அந்த சம்பந்தப்பட்ட செயலியை டெலிட் செய்து விடுங்கள்.
இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் போனில் எந்த தீங்கிழைக்கும் பயன்பாடுகளும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
ஸ்மார்ட்போன்களை பாதுகாப்பாக வைத்திருக்க கூடுதல் வழிகள் என்னென்ன?
* எந்த ஒரு செயலியையும் பதிவிறக்கம் செய்யும் முன்பு தரவு தனியுரிமைப் பகுதியைச் சரிபார்க்கவும்.
* எந்தவொரு செயலியையும் பதிவிறக்கம் செய்யும் முன்பு பயன்பாட்டு விளக்கத்தைப் படித்து ஸ்கிரீன்ஷாட்களைச் சரிபார்க்கவும்.
* அதிகப்படியான பாப்-அப் விளம்பரங்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான அனுமதிகளை கண்டால் அந்த செயலிகளை பதிவிறக்கம் செய்யாதீர்கள்.
* மூன்றாம் தரப்பு ஆப் ஸ்டோர்களைத் தவிர்க்கவும்: தெரியாத வலைத்தளங்கள் அல்லது மூன்றாம் தரப்பில் இருந்து செயலிகளை ஒருபோதும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.
